சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பழுது காரணமாக லிஃப்ட் பாதியில் நின்றதால் சிக்கிக் கொண்ட 13 க்கும் மேற்பட்ட பயணிகள், 1.30 மணி நேர போராட்டத்திற்குப்பின் மீக்கப்பட்டனர்.
சென்னை நுங்கம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம், பிரதான புறநகர் ரயில் நிலையமாகவும், அதிக பயணிகள் வந்து செல்லும் ரயில் நிலையமாகவும் உள்ளது. இங்கு பயணிகளின் வசதிக்காக புதிதாக லிஃப்ட் ஒன்று அமைக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தவர்களின் வசதிக்காக இந்த லிஃப்ட் வசதி ஏற்படுத்தப்பட்டது. என்றாலும் புறநகர் ரயில்களை விரைவாக பிடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் ஒரே நேரத்தில் அதிகமானவர்கள் லிஃப்டை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் ஆண்கள், பெண்கள், கைக்குழந்தைகள்
14 பேர் லிஃப்டில் ஏறி நடைமேடைக்கு செல்ல முயற்சித்தனர். அப்போது
எதிர்பாராவிதமாக நடுவிழியில் லிஃப்ட் பழுதாகி நின்றது. இதனால் செய்வதறியாது
தவித்த பயணிகள், லிஃப்டில் இருந்த அவசரகால பொத்தானை அழுத்தினர். லிஃட்டில் தாங்கள் சிக்கிக்கொண்ட தகவலை ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.
விரைந்து வந்த அதிகாரிகளும் தொழில்நுட்ப பணியாளர்களும் லிஃப்டை இயக்கி, மேலே
கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் ஒருமணி நேரத்துக்கு மேலாகியும் லிஃப்டை இயக்க முடியவில்லை.
வேறு வழியின்றி லிஃப்டின் கதவை உடைத்து பயணிகளை மீட்க முடிவு செய்யப்பட்டது.
சிக்கியவர்களின் உதவியுடன் அதன் பக்கவாட்டு கதவை உடைத்து, உள்ளே இருந்தவர்களை
மேலே தூக்கி ஒவ்வொருவராக வெளியில் கொண்டு வந்தனர் மீட்புப்படையினர். ஒன்றரை மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்டதால் பயணிகள் பெருமூச்சு விட்டனர்.
இரவு 8.53 மணிக்கு தகவல் கிடைத்த உடன் மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியதாகவும்,
5 பேர் அடங்கிய குழு போராடி அனைவரையும் பத்திரமாக மீட்டெடுத்ததாகவும் மீட்புப்பணியை ஒருங்கிணைத்த ரயில் நிலைய அதிகாரி மன்னார்
தெரிவித்தார்.
பிரதான புறநகர் ரயில் நிலையமான நுங்கம்பாக்கம் புறநகர் ரயில் நிலையத்தில் லிஃப்ட் பழுதான சம்பவம் பயணிகளை பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அனைவரும்
பத்திரமாக மீட்கப்பட்டாலும் எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக இருக்கிறது.









