கேரளாவைக் கண்டித்த தமிழ்நாடு விவசாயிகள்

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், கேரள அரசு தொடர்ந்து அத்துமீறுமானால், தமிழகத்திற்குள் வரும் கேரள வனத்துறை வாகனங்கள், தேனி மாவட்டத்தில் சிறை பிடிக்கப்படும் என ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரள…

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், கேரள அரசு தொடர்ந்து அத்துமீறுமானால், தமிழகத்திற்குள் வரும் கேரள வனத்துறை வாகனங்கள், தேனி மாவட்டத்தில் சிறை பிடிக்கப்படும் என ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரள மாநிலம் தேக்கடியில் முல்லைப் பெரியாறு அணையின் தமிழ்நாடு பொதுப்பணித் துறை அலுவலகம் மற்றும் அதிகாரிகளின் குடியிருப்புகள் உள்ளன. இங்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு கொண்டு செல்லப்பட்ட தளவாடப் பொருட்களை, கேரள வனத்துறையினர் கடந்த சில நாட்களுக்கு முன் தடுத்து நிறுத்தினர். பெரியார் புலிகள் காப்பகத்தின் அனுமதியின்றி தளவாடங்களைக் கொண்டு செல்லக் கூடாது எனக் கூறி, சோதனைச் சாவடியிலேயே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். கேரள வனத்துறையினரின் இந்த செயல் தமிழ்நாடு விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை

இதனைக் கண்டித்து ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர், தேனி மாவட்ட ஆட்சியர் முரளீதரனிடம் புகார் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ்.ஆர். தேவர், முல்லைப் பெரியாறு அணையின் பொதுப்பணித் துறை அலுவலகம் மற்றும் குடியிருப்பு பகுதிகளின் பராமரிப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்கத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், கேரள அரசு தொடர்ந்து அத்துமீறுமானால், தமிழகத்திற்குள் வரும் கேரள வனத்துறை வாகனங்கள், தேனி மாவட்டத்தில் சிறை பிடிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.