தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சிக்கான தேர்தல் ரத்து செய்யப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரநிதிகளை தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தேர்தல் பிப்.19 தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
தேர்தலுக்கான பரப்புரை தீவிரமடைந்து வரும் நிலையில், பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜன.28ம் தேதி தொடங்கி பிப்.4ம் தேதி நிறைவடைந்தது. மாநகராட்சி வார்டுகளுக்கு 40,701 மனுக்களும், நகராட்சி வார்டுகளுக்கு 23,354 மனுக்களும், பேரூராட்சி வார்டுகளுக்கு 36,361 வேட்புமனுக்களும் என மொத்தமாக 74,416 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை மாநிலம் முழுவதும் உள்ள 1,644 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. இதில் முறையாக பூர்த்தி செய்யப்படாத உரிய ஆவணங்களை இணைக்காத வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதேபோல மனுக்களை திரும்பப் பெற நேற்று மாலை 3 மணி வரை வேட்பாளர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டது. மாற்று வேட்பாளராக மனு செய்திருந்தவர்கள் அதை திரும்பப் பெற்றனர்.
இந்நிலையில், இருவர் மட்டும் மனு தாக்கல் செய்திருந்த தொகுதிகளில் முறையாக பூர்த்தி செய்யப்படாத உரிய ஆவணங்களை இணைக்காத வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.
அதேபோல தேர்தல் நடத்தை விதிகளை அதிகாரிகளும், பறக்கும் படையினரும் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சிக்கான தேர்தல் ரத்து செய்யப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடம்பூர் பேரூராட்சியில் தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகள், விதிகளை பின்பற்றாததால் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், மீண்டும் தேர்தல் நடத்தும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.








