பிரதமர் மோடி அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அமெரிக்காவின் நாசா உடன் இணைந்து சர்வதேச விண்வெளி நிலைய ஆராய்ச்சியில் ஈடுபட நாசா – இஸ்ரோ இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அரசு முறை பயணமாக பிரதமர் மோடி, அமெரிக்காவுக்கு சென்றுள்ள நிலையில், ஆர்டெமிஸ் உடன்படிக்கையில் இன்று இந்தியா இணைந்துள்ளது. இதன்படி வரும் 2024ஆம் ஆண்டுக்குள், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அமெரிக்காவின் நாசாவும் இந்தியாவின் இஸ்ரோவும் இணைந்து செல்ல ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆர்டெமிஸ் உடன்படிக்கை மூலம் விண்வெளி தொடர்பான ஆய்வை ஒத்த கருத்துடைய பல்வேறு நாடுகள் இணைந்து மேற்கொள்கின்றன. தற்போது, இதில் இந்தியா இணைந்திருப்பது குறித்து அமெரிக்க அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “மனிதகுலத்தின் நலனுக்காக விண்வெளி ஆய்வுக்கான பொதுவான பார்வையை முன்னெடுத்து செல்லும் ஆர்டெமிஸ் உடன்படிக்கையில் இந்தியா இணைய உள்ளது என்பதை அறிவிக்க உள்ளோம்” என்றார்.
கடந்த 1967ஆம் ஆண்டின் அவுடர் ஸ்பேஸ் உடன்படிக்கையின் (OST) அடிப்படையில், ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கைகள் 21 ஆம் நூற்றாண்டில் விண்வெளி ஆய்வு மற்றும் பயன்பாட்டிற்கு வழிகாட்ட வடிவமைக்கப்பட்ட கொள்கைகள் ஆகும். செவ்வாய் மற்றும் அதற்கு அப்பால் விண்வெளி ஆய்வுகளை விரிவுபடுத்தும் இறுதி குறிக்கோளுடன், 2025 ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை சந்திரனுக்குத் திரும்ப அனுப்புவதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இவை மட்டுமின்றி இந்தியாவில் புதிதாக பெங்களூர் மற்றும் அகமதாபாத்தில், அமெரிக்க தூதரகங்கள் அமைக்கும் ஒப்பந்தமும் கையெழுத்தாக உள்ளது. மேலும், அமெரிக்காவில் இந்தியர்கள் பணியாற்றுவதற்கான எச்.1 பி விசா நடைமுறையை எளிமைப்படுத்தும் ஒப்பந்தமும் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.








