விசாரணையில் நவீன தொழிநுட்ப வழிமுறைகளை பயன்படுத்திய தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க்-க்கு நீதிபதி பாராட்டு!

மதுரை அருகே உள்ள குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் உட்பட இருவர் கொலை செய்யபட்ட வழக்கை விசாரணை செய்த  தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்கிற்கு நீதிபதி பாராட்டு. மதுரையை சேர்ந்த பாஸ்கரன்…

மதுரை அருகே உள்ள குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் உட்பட இருவர் கொலை
செய்யபட்ட வழக்கை விசாரணை செய்த  தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்கிற்கு நீதிபதி பாராட்டு.

மதுரையை சேர்ந்த பாஸ்கரன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அதில், “மதுரை அருகே குன்னத்தூர் கிராமத்தில் கடந்த 2020 அக்டோபர் மாதம்
நடந்த குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணராஜ் மற்றும் முனியாசமி ஆகிய
இருவர் கொலை செய்யப்பட்டனர். இதையடுத்து முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திருப்பதி மற்றும் ஊராட்சி செயலர் வீரணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. ஆனால் காவல்துறையினர் உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க விடும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். எனவே ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணராஜன் மற்றும் அவருடன் இருந்த முனியசாமி ஆகியோரின் இரட்டை கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க, வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தனர்.

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது 4வது குற்றவாளியான செந்திலை ஏன்
கைது செய்யவில்லை என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், செந்தில் மனைவி முருகலட்சுமி தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்து இருந்தது.  இந்த வழக்கு மீண்டும் நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான தென் மண்டல காவல்துறை தலைவர் ஆஸ்ரா கார்க் விசாரணை குறித்த நிலை அறிக்கை தாக்கல் செய்தார்.

அறிக்கையில் “கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த செந்தில் கடந்த 2021 ஜனவரியில்
கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் வரிச்சியூர் செல்வம்
சம்பந்தப்பட்டுள்ளதால் தனிப்படை போலீஸார் ரவுடி வரிச்சியூர் செல்வத்தை கைது
செய்துள்ளனர்.

தொடர்ந்து தென் மண்டலத்தில் ஆடியோ-வீடியோகிராஃபிக் வழிமுறைகளைப் பயன்படுத்தி குற்றவாளிகள் மற்றும் சாட்சிகளின் வாக்கு மூலங்களைப் பதிவு செய்ய படுகிறது என தெரிவித்தார்.இதனை பதிவு செய்த நீதிபதி குற்ற வழக்குகளில் வாக்குமூலங்களை பெறுவதற்கு நவீன தொழில் நுட்பமான ஆடியோ-வீடியோகிராஃபிக் வழிமுறைகளைப் பயன்படுத்தும் முறையை நடைமுறைபடுத்தும் தென்மண்டல காவல்துறை தலைவரை அஸ்ரா கார்கை பாராட்டினார்.

மேலும் இம்முறையால் புலனாய்வு மேம்படுவதுடன் நேர்மையான முறையில் புலனாய்வு
நடைபெறுவதை உறுதிசெய்ய முடியும் இதன் மூலம் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை
பெற்றுத் தர முடியும் என தெரிவித்த நீதிபதி இரட்டை கொலை வழக்கு சம்பந்தமாக
தென் மண்டல காவல்துறை தலைவர் விசாரணை மிகவும் பாராட்டுக்குரியது என பாராட்டு தெரிவித்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.