காஸாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெர்லினில் உள்ள யூத தேவாலயம் ஒன்றில் நேற்று பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்துள்ளது. ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 13வது நாளாக இன்றும் வன்முறை நீடித்து வருகிறது.
காஸாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெர்மனி தலைநகரான பெர்லினில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கலவரத்தின்போது போலீஸாருக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அந்த நகரின் மத்தியில் அமைந்துள்ள யூத தேவாலயத்தில் நேற்று அதிகாலை இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.
இதுகுறித்து அந்தப் பகுதி யூத அமைப்பினர் கூறுகையில், அடையாளம் தெரியாத இருவர் வழிபாட்டுத் தலத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசியதாகத் தெரிவித்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷால்ஸ் கண்டனம் தெரிவித்தார். இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதற்குப் பிறகு ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்று அவர் எச்சரித்தார்.







