இடி தாக்கி உயிரிழந்த பெண்களுக்கு இழப்பீடு ரூ.5 லட்சம் மட்டும் தானா? அன்புமணி ராமதாஸ் கேள்வி?

இடி தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு, அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமத்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த அரியநாச்சி கிராமத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் மீது இடி தாக்கியதில் கனிதா, பாரிஜாதம், சின்னப்பொண்ணு, ராஜேஸ்வரி ஆகிய 4 பெண்கள் உயிரிழந்ததை அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இடி தாக்கி உயிரிழந்த வேளாண் பெண் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் மட்டும் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது போதுமானதல்ல. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், கரூரில் அரசியல் கட்சி நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கிய அரசு, உணவு படைக்கும் கடவுள்களான இந்த பெண் விவசாயிகளின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் மட்டும் வழங்குவதை ஏற்க முடியாது. அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், அவர்களின் குடும்பங்களில் தலா ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.

இடி தாக்கிய இந்த விபத்தில் பார்வையை இழந்திருக்கும் தவமணி என்ற பெண்மணிக்கு தரமான மருத்துவம் அளிப்பதுடன், அவருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும் வழங்க வேண்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.