“ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பதிவு செய்யப்பட்ட அமைப்பா?” – உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு சரமாரி கேள்வி!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பதிவு செய்யப்பட்ட அமைப்பா? எந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது? அல்லது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியா என தமிழ்நாடு அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சரமாரி கேள்விகள்…

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பதிவு செய்யப்பட்ட அமைப்பா? எந்த சட்டத்தின் கீழ் பதிவு
செய்யப்பட்டுள்ளது? அல்லது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியா என தமிழ்நாடு அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சரமாரி கேள்விகள் முன்வைக்கப்பட்டன. 

மதுரை, தேனி,  திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் 20 இடங்களில்
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ் என்கிற ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்  சங்கம் சார்பாக மதுரை, தேனி,
திண்டுக்கல்,  திருச்சி,  விருதுநகர்,  புதுக்கோட்டை,  ராமநாதபுரம், தூத்துக்குடி,  கன்னியாகுமரி,  கரூர்,  தென்காசி,  தஞ்சாவூர்,  சிவகங்கை  உள்ளிட்ட
மதுரை உயர்நீதிமன்ற கிளை வரம்பிற்கு உட்பட்ட 20 இடங்களில் வருகின்ற 22ம் தேதி
விஜயதசமி நாளன்று ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க கோரி
ஆர்.எஸ்.எஸ் மாவட்ட நிர்வாகிகள் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மனுவில் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாகவும்,  அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டும் விஜயதசமி (22-10-23 ) நாளன்று ஆர்எஸ்எஸ் சார்பாக பேரணி நடத்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.  குறிப்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் சீருடையான காக்கி டவுசர்,  வெள்ளை சட்டை,  தொப்பி,  பெல்ட், பிளாக் ஷூ அணிந்து இசை வாத்தியம் முழங்க நகர் முழுவதும் மாலை 4 மணிக்கு பேரணி ஆரம்பித்து நகரின் பல்வேறு பகுதிகளில் ஊர்வலமாக சுற்றிவந்து இறுதியாக
ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என அனுமதி கோரி
சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் கடந்த மாதம் விண்ணப்பித்திருந்தாக கூறப்பட்டுள்ளது.  அதோடு அந்த கோரிக்கை மனுவில் இதுவரை சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதே போல் கடந்த வருடம் பேரணி நடத்த அனுமதி வழங்க கோரி மனு அளித்தோம் . காவல்துறை அனுமதி வழங்கவில்லை.  இதனை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.  நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தும் காவல்துறை அனுமதி வழங்க மறுத்துவிட்டது.  பின்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அனுமதி பெற்று தமிழ்நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் ஊர்வல பேரணி நடத்தினோம்.  எனவே இந்த வருடம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது.  வழக்கு விசாரணையின் போது ஆர்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்,  விஜயதசமி அன்று ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் கையில் பாரத மாதா கொடியுடன் ஊர்வலம் நடத்த இருக்கிறோம்.  இந்தியாவில் உள்ள அனைவரையும் சகோதரத்துவத்துடன் தான்
பார்க்கிறோம்.  மேலும் ஊர்வலத்தின் போது எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாது.

ஊர்வலத்தின் போது ஆம்புலன்ஸ் வசதி செய்யப்படும்.  இந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஆர்எஸ்எஸ் அமைப்பு மீது குற்றவழக்குகள் பதிவு செய்யப்படவில்லை.  இந்தியாவை பாரதம் என்று நாங்கள் சொல்கிறோம் தவிர, அகண்ட பாரதம் என்று எங்கும் பேசவில்லை. இந்த ஆர் எஸ் எஸ் ஊர்வலம் அமைதியான முறையில் நடத்தப்படும் என வாதிடப்பட்டார்.

அப்போது அரசுத்தரப்பில், அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன், அரசு
குற்றவியல் வழக்கறிஞர் அன்புநிதி ஆகியோர் ஆஜராகினர்.  ஆர்.எஸ்.எஸ் தரப்பில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி தென் தமிழகத்தில் 20 இடங்களில் மனு அளிக்கப்பட்டிருந்தது அந்த மனுக்கள் அனைத்துமே நிராகரிக்கப்பட்டுள்ளன.  ஆர்எஸ்எஸ் கொடுத்த அனுமதி கடிதத்தில்,  எப்போது ஊர்வலம் நடத்தப்படும்? எங்கு ஆரம்பிக்கப்படும் ? எங்கு முடிக்கப்படும்?  மேலும் அந்த ஊர்வலத்தின் போது முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்களா? மற்றும் ஊர்வலம் செல்லும் பாதைகளில் பிற மத வழிபாடு தலங்கள் இருக்கிறதா? என்பது குறித்து எவ்வித முழுமையான தகவலும் இடம் பெறவில்லை.

மேலும் பல இடங்களில் ஆர்எஸ்எஸ் தரப்பில் விநியோகிக்கப்படும் துண்டு பிரசுரத்தில் பிரிவினை குறித்தும் சர்ச்சைக்குரிய வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. இது சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்பு என்பது எந்த சட்டவிதிகளின் படி பதிவு செய்யப்பட்டுள்ளது. அது
சங்க அமைப்பா? அல்லது அறக்கட்டளையா? அல்லது தேர்தல் ஆணையத்தால்
அங்கீகரிக்கப்பட்ட கட்சியா? என்கிற எவ்வித தகவலும் இல்லை.  ஊர்வலத்தின்
போது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது?

தென் மாவட்டங்களில் தேவர் குருபூஜை பாதுகாப்பு பணிக்காக 5 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.  இந்த நேரத்தில்
ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளித்தால் காவல்துறை பாதுகாப்பு வழங்குவதில் சிரமம் ஏற்படும்.  எனவே தென் மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கோரிய மனுக்களை தள்ளுபடி செய்யவேண்டும் என வாதிடப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதி இளங்கோவன், ஆர் எஸ் எஸ் ஊர்வலத்தின் போது ஒவ்வொரு மாவட்டங்களில் யார் பொறுப்பேற்பது? மேலும் ஊர்வலம் எங்கு ஆரம்பிக்கிறது? மற்றும் எங்கு நிறைவு செய்யப்படுகிறது? என்பது குறித்த முழு விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளை தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.