திருவள்ளூர் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் நேற்று அமோனியா கசிவு ஏற்பட்டு 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி, ஸ்டான்லி உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டு பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில். இன்று உயிரிழப்பு எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் அமோனியா கசிவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிச்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, “ திருவள்ளூர் மாவட்டத்தில் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் அமோனியா கசிவு ஏற்பட்டு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட சம்பவம்
மிகப்பெரிய துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துக்கு தொழிற்சாலைக்கு உள்ளேயே தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டது தான் முக்கியமான காரணமாகும். 18 வயதிற்கு குறைவானவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசாங்கம் தொழிற்சாலைகளை முறையாக ஆய்வு செய்கிறார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் உயர் சிகிச்சை அளிக்க வேண்டும். உயிரழந்தவகளுக்கு முதலமைச்சர் அறிவித்துள்ள 2 லட்சம் ரூபாய் இழப்பீடு மிகக் குறைவான தொகையாகும். இதனை தமிழ்நாடு அரசு அதகரிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் பல லட்சம் புலம் பெயர்த் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும். பாஜக அரசு 2020 ஆம் ஆண்டு தொழிலாளர்கள் தொகுப்பு சட்டம் என்ற பெயரில் ஏற்கனவே இருந்த தொழிலாளர் உரிமை தொடர்பான இருந்த சட்டங்களை மாற்றி புதிய சட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் தொழிலாளர்களின் பாதுகாப்பு மறுக்கப்பட்டு விபத்துகள் அதிகமாக நடக்க வாய்ப்புள்ளது. எனவே தொழிலாளர்கள் உயிர், உடமைக்கு எதிராக இயற்றப்பட்டுள்ள சட்டங்களை திரும்ப பெற வேண்டும்.
திருவள்ளூரில் அமோனியா கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு இந்த வழக்கை முறையாக நடத்த வேண்டும். சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்கள் உயிர் சிகிச்சை அளிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.




