நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் ஏழைப் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி பிறந்த குழந்தைகளை விற்பனை செய்த அரசு பெண் மருத்துவர் மற்றும் இடைத்தரகர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
திருச்செங்கோடு, சங்ககிரி, பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்கள், ஏழ்மை நிலையில் உள்ளோர் அதிக அளவில் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் மருத்துவ சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை நாடி வருவது வழக்கம்.
கர்ப்பம் தரித்து வரும் பெண்களிடம் குழந்தை பிறந்த பின், அவர்களிடம் இரண்டுக்கு மேல் குழந்தைகள் பிறந்திருந்துள்ளது என்றால், அவர்களிடம் ரூ.2 லட்சம் வரை விலை பேசி குழந்தையை பெற்றுக்கொண்டு, மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவர் அனுராதா, கரூரைச் சேர்ந்த இடைத்தரகர் லோகாம்பாள் ஆகியோர் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
அண்மையில் குழந்தை பெற்ற ஒரு பெண்ணிடம் இவ்வாறு பேரம் பேசிய நிலையில் அவர் திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில், மருத்துவர் அனுராதா பத்துக்கு மேற்பட்ட குழந்தைகளை விற்பனை செய்ததும், அதற்கு லோகாம்பாள் உறுதுணையாக இருந்ததும் தெரிய வந்தது. இதனை இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். இதையடுத்து மருத்துவர் அனுராதா, இடைத்தரகர் லோகாம்பாள் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், பெண் மருத்துவர் அனுராதா பணிநீக்கம் செய்யப்பட்டுவிட்டதாக சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.







