டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு சர்ச்சை தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது. இதையடுத்து பொது பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், வேளாண் பட்ஜெட்டை, வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் தாக்கல் செய்தனர். இதனை தெடர்ந்து சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதங்கள் தற்போது நடைபெற்று வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இபிஎஸ்ஸை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நாகை மாலி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் ஆகியோரும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
இதில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 700 பேர் தேர்வானது தொடர்பான செய்திகள் வெளியாகி இருக்கிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் பயின்ற 700க்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். இது தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும். அதேபோல் தென்காசியிலும் ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த 2000 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இது குறித்து உடனடியாக அரசு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் குரூப் 4 தேர்வு விவகாரத்தில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றிருக்கிறது. இந்த முறைகேடு தேர்வர்கள் மத்தியிலும் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், குரூப் 4 நில அளவையர் தேர்வு முறைகேடு புகார் எழுந்தவுடனேயே அது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேடு ஏதும் நடந்துள்ளதா என்பது பற்றி மனித வள மேம்பாட்டுத்துறைச் செயலரின் வாயிலாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. உரிய விளக்கம் பெற்ற பின்னர் அது பற்றி பேரவையில் தெரிவிக்கப்படும். குழப்பங்கள் நடைபெற்றிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா