ஈரான் மீது அமெரிக்கா- இஸ்ரேல் நடத்திய கூட்டுத்தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் ஆயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இதனையடுத்து இஸ்ரேலைக் குறிவைத்தும், பல்வேறு வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி, ஈரான் எதிா் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் விரோதங்கள், மத்திய கிழக்கு பிராந்தியத்தை பரந்த மோதலுக்குத் தள்ளுகின்றன. கிட்டத்தட்ட ஒரு கோடி இந்தியர்கள் உட்பட கோடிக்கணக்கான மக்கள் பாதுகப்பற்ற தன்மையை எதிர்கொள்கின்றனர்.
பாதுகாப்பு கவலைகள் உண்மையானவை என்றாலும், இறையாண்மையை மீறும் தாக்குதல்கள் நெருக்கடியை மேலும் மோசமாக்கும். ஈரான் மீதான ஒருதலைப்பட்ச தாக்குதல்களும், மற்ற மத்திய கிழக்கு நாடுகள் மீதான ஈரானின் தாக்குதல்களும் கண்டிக்கப்பட வேண்டும். வன்முறை வன்முறையைத் தோற்றுவிக்கிறது. பேச்சுவார்த்தையும் கட்டுப்பாடுமே அமைதிக்கான ஒரே பாதையாகவே உள்ளன.
இந்தியா சர்வதேச சட்டம் மற்றும் மனித உயிர்களைப் பாதுகாப்பதில் வெளிப்படையாகப் பேச வேண்டும். நமது வெளியுறவுக் கொள்கை இறையாண்மை மற்றும் சர்ச்சைகளை அமைதியான முறையில் தீர்ப்பதில் நிலையானதாக இருக்க வேண்டும்.
பிரதமர் மோடி பேச வேண்டும். ஒரு நாட்டின் தலைவரை படுகொலை செய்வதை அவர் ஆதரிக்கிறாரா…? மோடியின் மௌனம் உலகில் இந்தியாவின் அந்தஸ்தை குறைக்கிறது” என்று கூறியுள்ளார்.







