மீனவர்கள் கைது விவகாரம்: “கடமைக்கு கடிதம் மட்டும் எழுதுவது ஏன்?” – உதயநிதி ஸ்டாலின் கேள்வி

மீனவர்கள் கைது தொடர்பாக உணர்வுப் பூர்வமான நடவடிக்கை தேவை என சொன்னவர்கள் இப்போது கடிதம் மட்டும் எழுதுவது ஏன்? என உதயநிதி ஸ்டாலின் கேவி எழுப்பியுள்ளார்.

இலங்கை கடற்படையால் கைது செய்ய்ப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை மீட்க ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் விஜய் நேற்று கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் கடிதம் எழுதினால் மட்டும் போதுமா – உணர்வுப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டாமா?’ என்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சொன்னவர்கள், இப்போது கடிதம் மட்டும் எழுதுவது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது கண்டிக்கத்தக்கது.

இந்த பிரச்சினை தொடர்பாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இந்த அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.

மீனவர் பிரச்சினையில், ‘மானே – தேனே – பொன்மானே என்று கடிதம் எழுதினால் மட்டும் போதுமா – உணர்வுப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டாமா?’ என்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நம்மை பார்த்து சொன்னவர்கள், இப்போது கடமைக்கு கடிதம் மட்டும் எழுதுவது ஏன்?

ஆட்சிக்கு முன் – ஆட்சிக்குப் பின் என ஒவ்வொரு விஷயத்திலும் இரட்டை வேடம் போடுவது போல, மீனவர் பிரச்சினையிலும் இந்த #SofaModel அரசு ஏமாற்று வேலைகளில் ஈடுபடக்கூடாது.

இவர்கள் சொன்ன அந்த உணர்வுப்பூர்வமான நடவடிக்கையை உடனடியாக மேற்கொண்டு, இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.