அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு!

தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வீடு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நிகழ்ந்ததாகக் கூறப்படும் வழக்கில், அமைச்சர் ஐ.பெரியசாமி சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடந்த வழக்கில், கீழமை நீதிமன்றங்களின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2008-ம்…

தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வீடு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நிகழ்ந்ததாகக் கூறப்படும் வழக்கில், அமைச்சர் ஐ.பெரியசாமி சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடந்த வழக்கில், கீழமை நீதிமன்றங்களின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை, அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதியின் பாதுகாவலர் கணேசன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. பின்னர் 2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தது. அப்போது, வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த போது ஐ.பெரியசாமி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வீடு ஒதுக்கியதாக கூறி, 2012-ம் ஆண்டு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், கடந்த ஆண்டு மார்ச் 17-ம் தேதி வழக்கிலிருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து உத்தரவிட்டது. ஆனால், இதை மறுஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். இதையடுத்து, கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முறையாக ஒப்புதல் பெற்று ஐ.பெரியசாமி மீதான முறைகேடு வழக்கை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டார். மேலும், மார்ச் 28-ம் தேதி அமைச்சர் பெரியசாமியை விசாரணைக்கு ஆஜராகுமாறும் ஆணை பிறப்பித்தார்.

இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று (ஏப். 08) விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், வீட்டுவசதி வாரிய முறைகேடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடரக் கூடாது எனத் தெரிவித்தனர். மேலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் வரை கீழமை நீதிமன்றங்கள் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.