இந்தியாவில் 140 கோடி மக்கள் வாழ்கின்றனர். ஆனால், 100 பணக்காரர்களிடம் மட்டும் இந்தியாவுடைய 50 சதவீதம் சொத்துக்கள் குவிந்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7-ம் தேதி இந்திய ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரியில் தொடங்கினார். தமிழகம், கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் வழியே இந்த யாத்திரையை ராகுல் காந்தி நடத்தி வருகிறார். தற்போது ஹரியானாவில் பானிபட் என்ற இடத்தில் யாத்திரை நுழைந்துள்ளது.
யாத்திரையின் போது நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: கன்னியாகுமரியில் நாங்கள் தொடங்கிய யாத்திர தற்போது 112 நாட்களை நிறைவு செய்துள்ளது. பானிபட்டில் எங்களுக்கு மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
எனக்கு எப்போதும் ஒரு யோசனை தோன்றும். அதாவது நமது நாட்டில் உள்ள மக்கள் தொகை 140 கோடி. ஆனால் 100 பணக்காரர்களிடம் மட்டும் எப்படி இந்தியாவினுடைய மொத்த சொத்தில் 50 சதவீத சொத்துக்கள் குவிந்துள்ளன என்று எனக்கு தோன்றும். இது நியாயம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?. ஆனால், இதுதான் நரேந்திர மோடியின் இந்தியாவுடைய உண்மை முகம்.
நமது நாட்டில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்தை உற்று நோக்கினால், 90 சதவீத லாபம் வெறும் 20 நிறுவனங்களை சார்ந்ததாக இருக்கும். அதாவது இந்தியாவின் 50 சதவீத சொத்து 100 நபர்களின் கையில் உள்ளது. மத்திய அரசு இரண்டு இந்தியாவை உருவாக்கியுள்ளது. ஏழை மக்கள் மற்றும் சாதாரண மக்கள் வாழக்கூடிய ஒரு இந்தியா, அனைத்து சொத்துக்களுடன் 200-300 நபர்கள் வாழக்கூடிய இந்தியா என இரண்டு இந்தியாவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
பானிபட் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நிரம்பிய பகுதி. ஆனால் பணமதிப்பு நீக்க நடவடிக்கையும், ஜிஎஸ்டியும் சேர்ந்து இந்த நிறுவனங்களை அழித்துவிட்டன. இதுதான் நாடு முழுவதும் உள்ள நிலைமை. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.








