இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள் – ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

ஈரானில் அரசுக்கு எதிரான் மக்களின் போராட்டம் வலுத்து வரும் நிலையில் இந்தியர்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு ஈரானில் உள்ள இந்திய தூதரம் அறிவுறுத்தியுள்ளது.

மத்திய கிழக்கு நாடான ஈரானில் பொருளாதார நெருக்கடி மற்றும் நாணய மதிப்பு வீழ்ச்சி காரணமாக அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரம் அமெரிக்காவும் இஸ்ரேலும் இப்பிரச்சினையைத் தூண்டிவிடுவதாக ஈரான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. கடந்த சில வாரங்களாக நடந்து வரும் போராட்டத்தின் காரணமாக அந்நாட்டில் 490 போராட்டக்காரர்கள் மற்றும் 48 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளதாகவும், 10,600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ஈரான் தலைநகர் டெக்ரானில் அமைந்துள்ள இந்திய துதரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிடுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது :

* 5 ஜனவரி 2025 அன்று இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அறிவுறுத்தலின் தொடர்ச்சியாகவும், ஈரானில் உருவாகி வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், தற்போது ஈரானில் உள்ள இந்தியக் குடிமக்கள் (மாணவர்கள், யாத்ரீகர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள்) வணிக விமானங்கள் உட்பட கிடைக்கக்கூடிய போக்குவரத்து வழிகள் மூலம் ஈரானை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

* அனைத்து இந்தியக் குடிமக்களும் மற்றும் இந்திய வம்சாவளியினரும் உரிய எச்சரிக்கையுடன் இருக்குமாறும், போராட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதிகளைத் தவிர்க்குமாறும், ஈரானில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறும் மற்றும் எந்தவொரு புதிய நிலவரங்களுக்கும் உள்ளூர் ஊடகங்களைக் கண்காணிக்குமாறும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.

*ஈரானில் உள்ள அனைத்து இந்தியக் குடிமக்களும் தங்களின் பயண மற்றும் குடிவரவு ஆவணங்களான கடவுச்சீட்டுகள் மற்றும் அடையாள அட்டைகள் உட்பட அனைத்தையும் தங்களுடன் தயாராக வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக எந்தவொரு உதவிக்கும் இந்தியத் தூதரகத்தைத் தொடர்புகொள்ளுமாறு அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

* இந்தியத் தூதரகத்தின் அவசரத் தொடர்பு உதவி எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: கைபேசி எண்கள்: +989128109115; +989128109109; +989128109102; +989932179359. மின்னஞ்சல்: cons.tehran@mea.gov.in

* ஈரானில் உள்ள மற்றும் இந்தியத் தூதரகத்தில் பதிவு செய்யாத அனைத்து இந்தியக் குடிமக்களும், பின்வரும் இணைப்பில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் (https://www.meaers.com/request/home). இந்த இணைப்பு தூதரகத்தின் இணையதளத்திலும் கிடைக்கிறது. ஈரானில் இணையதள இடையூறுகள் காரணமாக ஏதேனும் ஒரு இந்தியக் குடிமகனால் பதிவு செய்ய முடியாவிட்டால், இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் அவ்வாறு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.