உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியல் இந்திய அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிபோட்டிக்குள் நுழைந்தது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெற்ற 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா –இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர்களில் கே.எல்.ராகுல் 5 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார்.
ரோஹித் சர்மா 27 ரன்கள் எடுத்த நிலையில், அவுட்டானார். அதன் பிறகு விராட்கோலியும், ஹர்த்திக் பாண்டியாவுடன் இணைந்து அதிரடியாக விளையாடினர். இதனால் அணியின் ரன் உயர்ந்தது. விராட்கோலி 50 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். ஆனால் ஹர்த்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி 33 பந்துகளில் 63 ரன்களை குவித்தார். இவர்களின் பொறுப்பான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்களை எடுத்தது.
பின்னர் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் வேறு யாரையும் களமிறக்காமல் அவர்களே அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய அவர்கள் 16 ஓவர்களிலேயே 170 ரன்களை எடுத்து அணியை வெற்றி பெற வைத்தனர். 
பட்லர் 49 பந்துகளில் 80 ரன்களும், ஹேல்ஸ் 47 பந்துகளில் 86 பந்துகளும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதையடுத்து, ஞாயிற்றுகிழமை நடைபெறும் இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன.
இந்திய அணி இறுதி ஆட்டத்திற்கு முன்னேறும் என எதிர்ப்பார்த்திருந்த ரசிகர்கள் இன்றைய போட்டியால் ஏமாற்றம் அடைந்தனர். அதே நேரத்தில் இந்திய ரசிகர்களின் கண்களுக்கு விராட்கோலியும், ஹர்த்திக் பாண்டியாவும் விருந்து படைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
– நம்பிராஜன்
TWITTER ID: https://twitter.com/Nambijournalist







