இந்தியா-நியூசி. 2வது ஒருநாள் போட்டி; மழையினால் ஆட்டம் ரத்து

இந்தியா-நியூசிலாந்துக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…

இந்தியா-நியூசிலாந்துக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது. ஹாமில்டனில் பெய்த மழை காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் நிலவியதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் 15 நிமிட தாமதத்திற்கு பிறகு டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடியது. தொடக்க வீரர்களாக ஷிகர்தவான், சுப்மன்கில் களமிறங்கினர். இந்திய அணி 4.5 ஓவர்களில் 22 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழையால் ஆட்டம் சுமார் 4 மணி நேரம் பாதிக்கப்பட்டது.

பின்னர் மழை நின்ற பின் இந்த போட்டி 29 ஓவர்களாக குறைக்கப்பட்டுவதாக நடுவர்கள் அறிவித்தனர். ஆட்டம் தொடர்ந்த பிறகு தவான் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய சூர்யகுமார், கில் உடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இந்திய அணி 12.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் மீண்டும் பாதிக்கப்பட்டது. கில் 45 ரன்களுடனும் சூர்யகுமார் யாதவ் 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் ஹாமில்டனில் மழை தொடர்வதால் இந்த போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. இதனால் வரும் 30ம் தேதி நடைபெறும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை சமன் செய்ய முடியும். ஒருவேளை அந்த போட்டியும் மழையால் கைவிடவிடப்பட்டால் ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.