உலக அளவில் இறால் ஏற்றுமதியில் இந்தியாவிற்கு முதலிடம் கிடைத்துள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ள பாஜக அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றிவைத்த மத்திய தகவல் – ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது..
தமிழகத்தில் முக்கியமான கட்சியாக பாஜகாவை வளர்த்துள்ளோம். தமிழகத்தில்
மிகப்பெரிய அளவில் பாஜக எழுச்சி பெற்று வீறு நடை போட்டு கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு பல திட்டங்களை வழங்கியுள்ளார். அனைத்து கிராமங்களிலும் பிரதமரின் திட்டங்களால் மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
குறிப்பாக முத்ரா திட்டத்தில் பெண்கள் அதிகம் பயன்பெற்ற மாநிலம் தமிழ்நாடு என்ற இலக்கை நாம் அடைந்துள்ளோம். இந்த திட்டத்தின் மூலம் தேசிய அளவில் தமிழகம் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.
உலக அளவில் இறால் ஏற்றுமதியில் இந்தியாவிற்கு முதலிடம் கிடைத்துள்ளது.
பிரதமரின் சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் சென்னை, ஆந்திரா, மகாபலிபுரம்,
மரக்காணம் பகுதியிலிருந்து அதிக அளவில் இறால் ஏற்றுமதி நடைபெற்று வருகிறது.
பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பைப்
பெற்றுள்ளது. இதில் ஏராளமான மக்கள் பயன் பெற்றுள்ளனர், ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்குவதில் பிரதமர் நரேந்திர மோடி முனைப்போடு உள்ளார் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.




