சட்டப்பேரவையில் நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகை அதிகரித்து முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது, “நெல் மற்றும் கரும்பு பயிருட்டுள்ள விவசாயிகளின் நலனை பாதுகாக்கின்ற வகையில் தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லாத அளவில் மாநில அரசின் நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகையை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.
நெல் கொள்முதல் பருவம் செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்க இருப்பதால், குறைந்தபட்ச ஆதரவு விலையுடன், மாநில அரசின் ஊக்கத் தொகையாக சன்ன ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.289, பொது ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.159 என உயர்த்தி, சன்ன ரக நெல் ரூ.2750-ம், பொது ரக நெல் ரூ.2600 என வழங்கப்படும்.
2025 -26 கரும்பு அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்து கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு, மத்திய அரசு மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.3290.50 நிர்ணயம் செய்துள்ளது; அதற்கு மேல் தமிழ்நாடு அரசால் சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.709.50 வழங்கப்படும். இதன்மூலம் விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.4000 கரும்பு விலையாக கிடைக்கப்பெறும். கடந்த 5 ஆண்டு்களில் கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகை 156 மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் தற்போது முதல் ஆண்டிலேயே 360.50 உயர்ந்த்தப்பட்டுள்ளது.
தவெக அரசு விவசாயிகளை ஒருபோதும் விட்டுவிடாமல், அவர்களோடு தோளோடு தோள் கொடுத்து, விவசாயம் சிறக்கவும், ஊரக வாழ்வாதாரம் சிறக்கவும், என்றும் உறுதுணையாக இருக்கும்” இவ்வாறு அவர் பேசினார்.




