கிண்டி அரசு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைப்பதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜூன் 15ஆம் தேதி சென்னை வருகிறார்.
சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 230 கோடி ரூபாய் செலவில் 1000 படுக்கைகளுடன் ‘கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை’ கட்டப்பட்டுள்ளது. கலைஞரின் நூற்றாண்டு நினைவை போற்றும் வகையில் சுமார் 51,429 சதுரமீட்டர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனையின் கட்டுமான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது.
இதன் திறப்பு விழாவை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று விரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதற்காக கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து பேசிய அவர், சென்னை கிண்டியில் கட்டப்பட்டு இருக்கும் பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவுக்கு வருகை தர அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு ஜூன் 5-ந் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தமிழகம் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திடீரென வேறு சில காரணங்களால் வர முடியவில்லை என்று கூறவே, பின்னர் அவரின் அந்த பயண திட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஜூன் 15, 20 ஆகிய 2 தேதிகள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், ஜூன் 15 ஆம் தேதி குடியரசு தலைவர் சென்னை வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா









