தங்க முலாம் பூசிய போலி நகைகளை அடகு வைத்து ரூ. 21 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மேலூரை சுற்றியப் பகுதிகளில் டிப்டாப் உடையணிந்த இளைஞர் ஒருவர் தங்க நகைகளை அடகு வைத்து பணம் வாங்கி சென்றுள்ளார்.
அந்த நகைகள் தங்க முலாம் பூசிய போலி எனத் தெரியவந்ததை அடுத்து கடை உரிமையாளர்களிடம் இருந்து காவல்துறைக்கு புகார்கள் வந்துள்ளன. அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை காவல்துறையினர் சம்மந்தப்பட்ட நபரை தேடி வந்தனர்.
இந்நிலையில், போலி நகைகளை அடகு வைத்து 21 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக சிவகங்கையைச் சேர்ந்த சிவசக்தி என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 4 லட்சம் ரூபாய் பணம், 46 சவரன் போலி நகைகள், ஒரு பைக் மற்றும் வீட்டுமனை பத்திரங்களை பறிமுதல் செய்தனர்.







