பேரன்புமும், பெரும் காதலும்: அப்பாக்களும் தமிழ் சினிமாவும்

தந்தை… இந்த வார்த்தையே ஒரு பேரன்பை, ஆறுதலை, பொறுப்பை நினைவுப்படுத்தும் வார்த்தையாக இருக்கிறது. அன்னையர் தினம், மகளிர் தினம், தந்தையர் தினம். இதுபோல தினங்களை நாம் வெறும் கொண்டாடங்களாக மட்மே பார்க்க கூடாது. இந்தச்…

தந்தை… இந்த வார்த்தையே ஒரு பேரன்பை, ஆறுதலை, பொறுப்பை நினைவுப்படுத்தும் வார்த்தையாக இருக்கிறது. அன்னையர் தினம், மகளிர் தினம், தந்தையர் தினம். இதுபோல தினங்களை நாம் வெறும் கொண்டாடங்களாக மட்மே பார்க்க கூடாது.

இந்தச் சமூகம் ஒரு தாயை கொண்டாடுவது போல, ஒரு தந்தையை கொண்டாடுவதில்லை, என்ற ஆதங்கம் ஆண்களிடம் நிலவுகிறது. இது ஆண்களுக்கு பெரும் உளவியல் சிக்கலை அளிப்பதாக இருப்பதை, நாம் எப்போதும் கவனித்ததில்லை. மகளின் படிப்புக்காக பல நாட்கள் சாப்பிடாமல் உறங்கிய தந்தைகள் அதிகம். படிப்பிற்காக நிலத்தை விற்று கல்லூரிகளுக்கு வெளியே ஏக்கத்தோடு காத்திருக்கும் தந்தைகள் அதிகம்.

மகளுக்கு பிடித்த உணவை, எந்த தூரத்திற்கும் சென்று வாங்கிக்கொண்டு வரும் தந்தைகள் இருக்கிறார்கள். குடும்பத்தை பிரிந்து அயல்நாட்டில் பலர் அவச்சொல் கேட்டு, வெறும் வீடியோ காலில் மகள் முகத்தை பார்த்து, அழாமல் பேசும் வித்தையையும் அவர்கள் கற்று வைத்திருப்பார்கள். மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் அவர்களுக்கு, தங்களின் வலியை மட்டும் கண்ணீரால் வெளிப்படுத்த அவ்வளவு தயக்கம் இருக்கும். இதுபோன்ற உணர்ச்சி மிக்க தந்தைகளை நமது சினிமாக்களிலும் நாம் பார்த்திருக்கிறோம்.

இயக்குநர் ராமின் ‘தங்க மீன்கள்’ படத்தில் உள்ள ’ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ பாடலுக்கு முன்பு ஒரு வரி வரும் ‘ மகள்களை பெற்ற அப்பாவுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தை சேர்ந்ததல்ல என்பது’.

இந்த படத்தில் தனது மகளுக்கு பிடித்த நாய் குட்டியை வாங்குவதற்காக அந்த தந்தை அலையும் காட்சிகள் நமக்கு கண்ணீர் வரவழைக்கும். அதுபோல் நண்பரிடத்தில் மகள் பள்ளி படிப்புக்காக கடன் கேட்டு நிற்கும் தந்தையாக இயக்குநர் ராம் அற்புதமாக நடித்திருப்பார்.

அதுபோல 2006-ல் வெளியான எம்டன் மகன் படத்தில், மகனை நாசர் கொமைபடுத்துவார். ஆனால் அந்த படத்தில் மகன் பரத்திற்கும், நாசருக்கும் இருக்கும் ஒரு ஊடாட்டமான அன்பை, ஒருகட்டத்தில் நாசர் மூலம் அழகுற வெளிகாட்டியிருப்பார் இயக்குநர்.

கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ’வாரணம் ஆயிரம்’ படம் ‘ஒரு மகனுக்கு அப்பா எப்படி ஒரு ஹிரோவாக இருக்கிறார்’ என்பதை விவரித்து இருக்கும். அப்பாவின் காதல், வீட்டை காலி செய்தபோது அப்பாவுடன் சென்ற லாரிப் பயணம். இப்படியாக படம் முழுக்க அப்பாவை இயக்குநர் கொண்டாடி இருப்பார்.

சேரன் இயக்கத்தில் வெளியான தவமாய் தவமிருந்து படத்தில் அப்பாவின் தியாகங்களை, ஒரு பாடல் மூலமே காட்சிப்படுத்தியிருப்பார்கள். இந்த படத்தில் வரும் அப்பா தொடர்பான காட்சிகள் நம் கண்களை ஈரமாக்கிவிடும்.

பேரன்பு படத்தில் நடிக்கும் அப்பா மம்மூட்டி அன்பின் எல்லைக்கே சென்றிருப்பார். மாற்றுத் திறனாளி மற்றும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மகளுக்கும், ஒரு அப்பாவிற்கும் இடையில் இருக்கும் உணர்வு கலந்த பயணம் தான், இந்த படமே. எல்லா கோணங்களிலிருந்து அப்பா மகள் உறவை இயக்குநர் அணுகியிருப்பார்.

2013-ல் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில், தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் என்ற பாடலை கேட்டு அழாமல் யாரால் இருக்க முடியும்…

தமிழ் சினிமாக்கள் மட்டுமல்ல, ஹாலிவுட் சினிமாவிலும் அப்பா பாசம் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 2006-ல் வெளியான The Pursuit Of Happyness என்ற படத்தில், வில் ஸ்மித்தும், ஜேடன் ஸ்மித்தும் அசத்தலாக நடித்திருப்பார்கள். அப்பா – மகன் இடையில் இருக்கும் சின்னச் சின்ன சந்தோஷங்கள் இப்படத்தில் அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

இப்படி வெள்ளித்திரையில் மட்டுமல்ல, நமது மனத்திரையிலும், அப்பாவின் அன்பும், தியாகமும் எப்போதும் நிழலாடிக்கொண்டே இருக்கும்.

வாசுகி, நியூஸ் 7 தமிழ், சென்னை

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.