டெல்லியில் காலையில் டெம்போ மாலையில் மெட்ரோ என பொதுமக்களுடன் பயணித்து மகிழ்ந்தார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இன்று (23.05.2024) காலை டெம்போ வாகனத்தில் பயணித்த நிலையில், இன்று (23.05.2024) மாலை டெல்லி மெட்ரோவில் பயணிகளுடன் பேசிக்கொண்டே பயணித்த புகைப்படங்கள் வைரலாகிவருகின்றன.
மெட்ரோ பயணம், டெல்லியின் மனதுக்கு இனியவர்களுடன் சேர்ந்து.. என்று அவர் மெட்ரோ ரயிலில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி மெட்ரோவில் பயணித்த ராகுல் காந்தி, பயணிகளுடன் உரையாடி மகிழ்ந்தார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, டெல்லி மெட்ரோ பயணிகளின் நலன்களை கேட்டறிந்தேன் – பொதுப் போக்குவரத்தில், மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டதால், மக்களுக்கு மிகுந்த வசதி ஏற்பட்டிருப்பதை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் என்றும் பதிவிட்டுள்ளார்.
ராகுலின் மெட்ரோ பயணம் மற்றும் பயணிகளுடன் உரையாடும் விடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது.
இன்று (23.05.2024) டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, இந்த தேர்தல், இந்திய அரசியலமைப்பை காப்பாற்றுவதற்கான தேர்தல். அது வெறும் புத்தகம் மட்டுமல்ல, நமது அரசியல் சாசனம் என்பது காந்தி, அம்பேத்கர், நேருவின் ஆயிரக்கணக்கான ஆண்டுகால கருத்தியல் பாரம்பரியத்தை கொண்டிருக்கிறது என்று கூறினார்.







