12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது,
“நேற்று (09-01-2026) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வலுவிழந்து இன்று (10-01-2026) காலை 05.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, வடகிழக்கு இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.
இது மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில், முல்லைத்தீவிற்கு (இலங்கை) கிழக்கு – தென்கிழக்கே சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிலும், திரிகோணமலைக்கு (இலங்கை) வடக்கு – வடகிழக்கே 60 கிலோ மீட்டர் தொலைவிலும், யாழ்ப்பாணத்திற்கு (இலங்கை) கிழக்கு – தென்கிழக்கே 140 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 250 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கு – தென்கிழக்கே 450 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு இலங்கை கடலோரப்பகுதிகளில், திரிகோணமலை (இலங்கை) மற்றும் யாழ்ப்பாணம் (இலங்கை) இடையே, முல்லைத்தீவிற்கு (இலங்கை) அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று (10-01-2026) மதியம் /மாலை கரையை கடக்கக்கூடும்.
10-01-2026: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று அவ்வப்பொழுது மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
11-01-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
12-01-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
13-01-2026 முதல் 16-01-2026 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்”
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.







