முக்கியச் செய்திகள் தமிழகம்

விரைவில் வருகிறது ‘வலிமை’ – அமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாட்டில் அரசு சிமெண்ட் விரைவில் விற்பனைக்கு வரும் என தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தனியார் சிமெண்ட்டின் விலை 2021 மார்ச் மாதம் 420 ரூபாய் முதல் 450 ரூபாய் ஆக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து, ஜீன் மாத முதல் வாரம் மூட்டை ஒன்றுக்கு 470 ரூபாய் முதல் 490 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்தது. இந்த விலை உயர்வு அரசின் கவனத்திற்கு வந்தவுடன் முதலமைச்சர் உத்தரவின் பேரில், தொழில் துறை அமைச்சர் சிமெண்ட் விலையை குறைப்பது தொடர்பாக தனியார் சிமெண்ட் உற்பத்தியாளர்களுடன் தலைமைச் செயலகத்தில் 14.06.2021 அன்று பேச்சுவார்த்தை நடத்தினார். அக்கூட்டத்தில், சிமெண்ட் விலை உயர்ந்துள்ளதனால் கட்டுமான தொழிலுக்கும், பொது மக்களுக்கும் ஏற்படக்கூடிய இன்னல்களை குறிப்பிட்டு, சிமெண்ட் விலையை குறைக்குமாறு தனியார் சிமெண்ட் உற்பத்தியாளர்களை தொழில் துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார். அதற்கிணங்க, தனியார் சிமெண்ட் உற்பத்தியாளர்கள் தங்களுடைய சிமெண்ட் சில்லறை விற்பனை விலையினை மூட்டை ஒன்றுக்கு 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை குறைத்து, 15.06.2021 முதல் விற்பனை செய்து வந்தனர். விலை உயர்வினை மேலும் குறைக்க, அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாக சிமெண்ட் விலையானது 420 ரூபாய் முதல் 450 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் நிலக்கரி தட்டுப்பாடு, விலை உயர்வு மற்றும் நிலக்கரி இறக்குமதிக்கான போக்குவரத்து செலவினங்கள் ஆகியவை உயர்ந்த காரணத்தால், கடந்த 6.10.2021 அன்று சிமெண்ட்டின் விலையானது 470 ரூபாய் முதல் 490 ரூபாய் வரை விற்கப்பட்டது. அரசு தொடர்ந்து வலியுறுத்தியதின் அடிப்படையில் சிமெண்ட்டின் விலையானது குறைக்கப்பட்டு, 440 ரூபாய் முதல் 450 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. தற்போது நடைமுறையிலுள்ள சிமெண்டின் விலையானது மார்ச் மாத விலையான ரூபாய் 420-ஐ ஒப்பிடுகையில் சற்று உயர்ந்து தற்சமயம் 440 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த உயர்வானது 4.7 சதவீதமே ஆகும். எனவே, சிமெண்டின் இந்த விலையேற்றம் 33 சதவீதம் உயர்ந்துள்ளது என்ற கூற்று உண்மைக்கு புறம்பானது. தற்போது ஏற்பட்டுள்ள 20 ரூபாய் விலையேற்றத்தை மேலும் குறைக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் (டான்செம்) சிமெண்ட் உற்பத்தி மற்றும் விற்பனையை உயர்த்தி மக்களுக்கு குறைந்த விலையில் சிமெண்ட் விநியோகம் செய்ய இந்த அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் 2020 முதல் செப். 2020 வரை 3,67,677 மெ.டன் டான்செம் சிமெண்ட் விற்பனை செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டில் இது மார்ச் 2021 முதல் செப். 2021 வரை இரு மடங்குக்கும் மேலாக 7,68,233 மெ.டன் என உயர்ந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தற்போது, டான்செம் சிமெண்ட் 350 ரூபாய் முதல் 360 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. தனியார் சிமெண்டின் விலையினை ஒப்பிடுகையில், 90 ரூபாய் குறைந்த விலையில் தரமான டான்செம் சிமெண்ட் சிறப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த வருடங்களில் தமிழ்நாட்டின் சிமெண்ட் விற்பனையில் டான்செமின் விற்பனைப் பங்கு மிகக்குறைவாகவே இருந்தது. சென்ற வருடம் 3.5 சதவீதம் ஆக இருந்த டான்செம்மின் விற்பனை பங்கானது நடப்பாண்டில் 7.35 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும், டான்செம் விற்பனையினை அதிகரிக்க தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், ஓரிரு வாரங்களில், தமிழக அரசின் டான்செம் நிறுவனம் “வலிமை” என்ற புதிய பெயரில் சிமெண்ட் அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிறுவனம் மூலம், மாதம் ஒன்றுக்கு சுமார் 90,000 மெ.டன் என்ற அளவில் வெளிச்சந்தையில் “அரசு” சிமெண்ட் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனுடன், குறைந்த விலையிலும், நிறைந்த தரத்திலும் “வலிமை” சிமெண்ட் முதல் கட்டமாக மாதம் ஒன்றுக்கு 30,000 மெ.டன் என்ற அளவில் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படவுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் சிமெண்ட்-ன் சில்லறை விற்பனை விலை மேலும் குறையும்.” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமின் மனு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு

Halley Karthik

ராகுல் காந்தி தமிழக வருகை: பிரச்சார தேதிகள் அறிவிப்பு!

Saravana

அதிமுக அமமுக இணைப்பு குறித்து பா.ஜ.க எல் முருகன் கருத்து

Jeba Arul Robinson