பாஜகவிற்கு தக்க பதிலடி கொடுக்கும் வலிமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 18-ஆம் ஆண்டு இஃப்தார்
நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்
தலைவர் திருமாவளவன், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்,
திரைப்பட இயக்குனர் அமீர், சட்டமன்ற உறுப்பினர் அசாத் மௌலானா, நாடாளுமன்ற
உறுப்பினர் நவாஸ்கனி, உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பேசிய திருமாவளவன், சங்பரிவார் கும்பலின் உண்மையான அரசியலை அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பு, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட ஜனநாயக சக்திகளின் கடமையாகும் எனக் கூறினார். அம்பேத்கரின் சிந்தனைகளை பிரதமர் மோடி செயல்படுத்தி வருவதாக இசையமைப்பாளர் இளையராஜா புத்தகம் ஒன்றில் முன்னுரை எழுதியுள்ளது குறித்து பேசிய அவர், இசைஞானி இளையராஜா பாவம். இளையராஜா போன்றவர்களை குறி வைப்பதே ஆர்எஸ்எஸ்காரர்களின் முக்கிய நோக்கம். ஆர்எஸ்எஸை சேர்ந்தவர்கள் இளையராஜாவிற்கு நெருக்கடி அளித்து இக்கருத்தை பெற்றிருக்கூடும் எனக் கூறினார்.
தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தைகளா அல்லது பாஜகவா என்ற அரசியலை கையிலெடுக்க எந்த தயக்கமும் இல்லை. அம்பேத்கர் சிலைக்கு மாலை போடும் போதாவது, அவர்களுக்கு ஞானம் கிடைக்கிறதா என பார்க்கலாம் என நினைத்தேன். பாஜக, ஆர்.எஸ்.எஸ் அலுவலகங்களில் அம்பேத்கர் சிலையை திறந்து மாலை போடுங்கள் என்றும் குறிப்பிட்டார்.








