‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் தர இழுத்தடிக்க வேண்டிய அவசியமில்லை – சீமான்!

‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் தருவதற்கு இழுத்தடிக்க வேண்டியதில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை தொடர்ந்து அனைவரது இல்லங்களிலும் விளக்கேற்ற வேண்டும் என்று பாஜக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர் என கேட்கின்றீர்கள். நாட்டில் பல கோடி மக்கள் பசியாக இருக்கிறார்கள் முதலில் அவர்களது வீடுகளில் விளக்கேற்றுங்கள். பிறகு வீடு வீடாக விளக்கேற்றலாம். வீடுகள் எல்லாம் இருட்டிலா உள்ளது? என விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் பேசியவர், ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு ஏதோ ஒரு சான்றிதழை கொடுத்து விடலாம். அதன் தெலுங்கு பதிப்பை நான் பார்த்திருக்கிறேன். நெருக்கடி தரும் அளவிற்கு அதில் ஒன்றும் இல்லை. எனவே தணிக்கை சான்றிதழ் தருவதற்கு இவ்வளவு இழுத்தடிக்க வேண்டிய அவசியமில்லை. தமிழ் என்பது சீமானுக்கு அரசியல் பிழைப்பு என்று சுப வீரபாண்டியன் கூறியதற்கு பதிலளித்த சீமான், உயிரோடு இருப்பவர்களின் கருத்துக்களுக்கு மட்டும் பதில் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.