பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றுக்குள் கள்ளழகர் எழுந்தருளினார்.
சித்திரை திருவிழாவில் நேற்று முன்தினம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடத்தப்பட்ட நிலையில், நேற்று திருக்கோவில் தேரோட்டம் நடந்தது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று அதிகாலை தொடங்கியது.
2 ஆண்டுகளுக்குப் பிறகு வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றுப் பகுதியில் நள்ளிரவு முதல் காத்திருந்தனர். தல்லாகுளம் கோயிலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மலரை அணிந்து கொண்டு தங்கக் குதிரையில் கிளம்பினார் கள்ளழகர்.
பச்சை பட்டுடுத்தி வந்த கள்ளழகரை கோவிந்தா கோஷமிட்டும், தண்ணீரை பீச்சியடித்தும், ஆடிப்பாடியும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உற்சாகமாக வரவேற்றனர். பச்சை பட்டு உடுத்தினால் இயற்கை வளம் விளைச்சல் சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. வைகை ஆற்றுக்குள் வந்த அழகரை வண்டியூர் வீரராகவப் பெருமாள் வரவேற்றார்.வைகையாற்றில் இறங்கிய கள்ளழகரை மலர்த்தூவி மக்கள் வரவேற்றனர். அங்குள்ள மலர்களால் நிரப்பப்பட்ட நீர்த்தொட்டியில் அழகர் இறங்கினர். ஆற்றுக்குள் அமைக்கப்பட்டுள்ள மண்டகப்படியில் மூன்று முறை சுற்றிவந்து பொதுமக்களுக்கு அருள்பாலித்தார்.






