விஜயகாந்தை போல் அரசியலுக்கு வர நினைத்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜய்காந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. ஆலோசனை கூட்டம் நடத்திய பின்னர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவரிடம் விஜய் அரசியல் வருகை குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்து பேசிய அவர் கூறியதாவது;
யார் நினைத்தாலும் விஜயகாந்தைப் போல் வர முடியாது. அறிவுரை வழங்குவதற்கு எல்லாம் இங்கு ஒன்றுமில்லை. அரசியல் என்பது வேறு, சினிமா என்பது வேறு. விஜய் மாணவர்களுக்கு உதவிகளை வழங்கி ஊக்கப்படுத்தியுள்ளார். பாராட்டுக்குரிய விஷயம். விஜய் அரசியலுக்கு வருகிறாரா இல்லையா என்பது பற்றி அவர் தான் தெளிவுபடுத்த வேண்டும். அவர் சொல்வதற்கு முன் அதைப் பற்றி பேசுவது சரியாக இருக்காது.
விஜயகாந்த் எப்படி தொடக்க காலத்தில் மாணவர்களுக்கு இலவச கணினிப் பயற்சி உள்ளிட்ட உதவிகளை செய்தது போலவே, தற்போது விஜய்யும் மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அதை எப்படி பார்க்கிறீர்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளீர்கள்.
அனைத்து நற்செயல்களுக்கும் முன்னுதாரனம் விஜயகாந்த். தன்னால் முடிந்ததை மக்களுக்கு செய்த ஒரே தலைவர் கேப்டன் தான். 40 ஆண்டுகாலம் எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர். கேப்டனைப் போல் ஒருவர் பிறந்து வந்தால் தான் உண்டு. விஜயகாந்த் வாழ்க்கை ஒரு வரலாறு. அவர் ஒரு சரித்திரம். அப்படிப்பட்ட அவரைப்போல் அரசியலுக்கு வர நினைத்தால், அதனுடைய விளைவு மோசமாத்தான் இருக்கும். எனென்றால் இன்று எல்லா விஷயங்களுக்கும் கேப்டன் ஒரு முன்னுதாரணம்.
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
- பி. ஜேம்ஸ் லிசா








