இந்தியாவில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வைக் கட்டுப்படுத்த டெல்லி அரசு ஒரு அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. டெல்லியில் அரசு ஊழியர்கள் இனி வாரத்தில் இரண்டு நாட்கள் அலுவலகம் வரத் தேவையில்லை என்றும் வீட்டிலிருந்தே தங்களது பணிகளைச் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைத் தொடர்ந்து, எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளை ஏற்று டெல்லி அரசு இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி, டெல்லி அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
இதன் மூலம் அரசு வாகனங்கள் மற்றும் ஊழியர்களின் சொந்த வாகனங்கள் சாலையில் இயங்குவது குறைக்கப்பட்டு, கணிசமான அளவு பெட்ரோல் மற்றும் டீசல் சேமிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாகனப் போக்குவரத்து குறைவதால் டெல்லியின் காற்று மாசு அளவும் குறைய வாய்ப்புள்ளது. டெல்லியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களும் இந்த முறையைப் பின்பற்றுவது குறித்துப் பரிசீலித்து வருகின்றன.
அரசு ஊழியர்கள் அலுவலகம் வராதது எரிபொருள் சேமிப்பிற்கு மட்டுமல்லாமல், அலுவலகங்களின் மின்சாரத் தேவையையும் குறைக்கும். இது நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தைச் சீர்செய்ய உதவும்” எனப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.







