சொந்த கட்சியை விமர்சித்த காங்., அமைச்சர் நீக்கம்: மன்னிப்பு கேட்க மறுப்பு!

நான் பாஜகவுடன் இணைந்து செயல்படுவதாக குற்றம் சாட்டி, என்னை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினர். நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும், என பதவி பறிக்கப்பட்ட மாநில அமைச்சர் ராஜேந்திர சிங் குதா…

நான் பாஜகவுடன் இணைந்து செயல்படுவதாக குற்றம் சாட்டி, என்னை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினர். நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும், என பதவி பறிக்கப்பட்ட மாநில அமைச்சர் ராஜேந்திர சிங் குதா தெரிவித்துள்ளார்.

 

 

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் சில நாட்களுக்கு முன்பாக மணிப்பூர் வன்முறைகள் குறித்து அம்மாநிலத்தின் ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் விவாதம் எழுப்பினர். இதற்கு மாநில ஊர்க்காவல் படை, சிவில் பாதுகாப்பு, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைகளின் இணை அமைச்சரான ராஜேந்திர சிங் குதா ஆட்சேபம் தெரிவித்தார்.

பெண்கள் பாதுகாப்பில் நாம் தோல்வி அடைந்து விட்டோம் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும் எனவும், மணிப்பூருக்கு பதிலாக ராஜஸ்தானிலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்துள்ளதை நாம் முதலில் பார்க்க வேண்டும் எனவும் அமைச்சர் ராஜேந்திர சிங் குதா கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய அம்மாநிலத்தின் பாஜக தலைவர் ராஜேந்திர ரத்தோர், ”கூட்டுப் பொறுப்பின் அடிப்படையில் அரசு செயல்படுகிறது. ஒரு அமைச்சர் பேசினால், முழு அரசும் பேசுவதாக அர்த்தம் என்று அரசியல் சாசனம் கூறுகிறது. இந்த அரசை அமைச்சர் அம்பலப்படுத்தியுள்ளார். அவரை நான் வாழ்த்துகிறேன். ஆனால் இது வெட்கக்கேடான விஷயம்” இவ்வாறு கூறினார்.

மிகவும் பரபரப்பாக நடந்த விவாதத்திற்கு தொடர்ந்து ராஜேந்திர சிங் குதாவின் அமைச்சர் பதவியை பறித்து அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் உத்தரவிட்டார். இதற்கு பாஜக எம்.பி ராஜ்யவர்தன் ராத்தோர் உட்பட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ராஜஸ்தான் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், இன்று சட்டசபைக்கு வந்த ராஜேந்திர சிங் குதாவை, பாதுகாப்பு அதிகாரிகள் சிலர் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து போராடியும் சட்டசபைக்குள் அவரால் நுழைய முடியவில்லை. இந்நிலையில் ராஜேந்திர சிங்க் குதா  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“”ராஜஸ்தானில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்றும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன என்றும் நான் கூறிய 15 வினாடி அறிக்கைக்காக நான் பதவி நீக்கம் செய்யப்பட்டேன். நான் பாஜகவுடன் இணைந்து செயல்படுவதாக குற்றம் சாட்டி, என்னை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினர். நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும், என் தவறு என்ன என்பதை கேட்க விரும்புகிறேன்,” இவ்வாறு கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.