தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது சமூக வலைதளங்களின் அவதூறு கருத்து பதிவு செய்த நபரின் முன் ஜாமின் தொடர்பான மனுவில், கையில் ஒரு செல்போன் வைத்துக் கொண்டால் சமூக வலைதளங்களில் கண்டபடி பதிவு செய்யலாமா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த விஜில் ஜோன்ஸ் என்பவர் தனது முகநூல் மற்றும் ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மூத்த அமைச்சர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்தனர்.
இதனைத்தொடர்ந்து விஜில் ஜோன்ஸ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு செய்தார். அந்த மனுவில், “முகநூல், ட்விட்டர் தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மூத்த அமைச்சர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக கூறி காவல்துறை என் மீது பொய்யான வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரசியல் முன்விரோதம் காரணமாக என்மீது புகார் அளிக்கப்பட்டது. இது முற்றிலும் பொய்யான ஜோடிக்கப்பட்ட புகாராகும். எனவே எனக்கு இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும்” என மனு அளித்திருந்தார்.
இந்த முன்ஜாமின் மனு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் மீது அரசியல் காழ்ப்புணர்வாக காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவே இந்த வழக்கில் மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.
அப்பொழுது நீதிபதி கையில் ஒரு செல்போன் வைத்துக் கொண்டால் சமூக வலைதளங்களில் என்ன வேண்டுமானலும் கண்டபடி பதிவு செய்யலாமா? என கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை குறித்து அவதூராக பதிவு செய்துவிட்டு இனி இது போன்று பதிவு செய்ய மாட்டேன் என பதிவு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என கூறிய நீதிபதி, மனுதாரர் சிறைக்கு தான் செல்ல வேண்டும், எனவே மனுதாரரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து மனுதாரரை சம்பந்தப்பட்ட காவல்துறையினர் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.







