ஜன. 24-ம் தேதி விஜயகாந்த் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி : தேமுதிக அறிவிப்பு!

தேமுதிக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த்தின் நினைவிடத்தில் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் ஜன. 24-ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த கடந்த ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி உடல்…

தேமுதிக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த்தின் நினைவிடத்தில் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் ஜன. 24-ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த கடந்த ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானர். அவரது உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும், ரஜினி, கமல், விஜய் உட்பட பல திரையுலகினரும் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடந்து, அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதனிடையே அவரது மறைவிற்கு நடிகர் சங்கம் சார்பில், வருகிற ஜன. 19-ம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் நினைவஞ்சலி கூட்டம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வரும் ஜன. 24-ம் தேதி படத்திறப்பு நினைவேந்தல் விஜயகாந்த் நினைவிடத்தில் நடைபெறவுள்ளதாக தேமுதிக தலைமை கழகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர், புரட்சிக்கலைஞர் கேப்டனின் நினைவிடத்தில் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 24.01.2024 புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.