24 C
Chennai
December 4, 2023
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் ஹெல்த் லைப் ஸ்டைல்

இனிப்பை மருந்து போல் சாப்பிட்டால் எதிர்காலத்தில் மருந்து சாப்பிடும் நிலை வராது


Dr. A.B. ஃபரூக் அப்துல்லா

மருத்துவம்

இனிப்பு என்பது மருந்து போன்றது. இனிப்பை நாம் மருந்து போல எப்போதாவது எடுத்தால் எதிர்காலத்தில் நீரிழிவுக்கு தினமும் மருந்து எடுக்கும் நிலையை தவிர்த்துக்கொள்ளலாம்.

இனிப்பு என்பது மனிதனுக்கு அன்றாடம் தேவைப்படும் ஒரு சுவை அன்று. அது என்றோ ஒரு நாள் கிடைத்தால் தான் அதற்கு மரியாதை. அதற்கு மேல் இனிப்பு சுவை அனுதினமும் கேட்பது மூளையில் ஒரு அடிமைத்தனத்தை உருவாக்கி விட்டதன் அர்த்தம். மூளையில் பரிசில் தரும் மையம் உள்ளது. அதை Reward centre என்று கூறுவோம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மதிமயக்கும் விசயம் ஒன்றை நாம் செய்தால் அது பரிசில் தரும் இடத்தைத் தூண்டும். பிறகு மீண்டும் மீண்டும் அதையே செய்யச்சொல்லி மூளை நம்மை கட்டாயப்படுத்தும். மூளைக்கு அது நமது உடலுக்கு நன்மையான காரியமா? தீமை தரும் காரியமா? என்றெல்லாம் தெரியாது.

தனக்கு விருப்பமான தன்னை குதூகலத்தில் ஆற்றும் ஒன்றை மீண்டும் மீண்டும் செய்யச்சொல்லி நம்மை உந்தும் இந்த கூறுகெட்ட மூளை போதைப்பொருட்களான மது, கொகெய்ன் போன்றவை போலவே இந்த இனிப்பு சுவையும் அதிகமான அளவு மூளையின் பரிசில் தரும் மையத்தை தூண்டுகிறது.

இன்னும் சொல்லப்போனால், கொகெய்ன் போதைப்பொருளை விட சில மடங்கு அதிகமாக நாம் அனுதினம் உண்ணும் சர்க்கரை போன்ற இனிப்பு சுவை தரும் உணவுகள் தூண்டுகின்றன என்பது ஆய்வுப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மைகள். இந்த இனிப்பு சுவை இவ்வாறு மூளைக்கு அடிமைத்தனத்தை ஏற்படுத்துகின்றது.

இதில் இருந்து எப்படி வெளியே வருவது? என்னதான் மூளை அடம்பிடித்தாலும் இனிப்பு உண்பதை ஒரு மாதம் நிறுத்தி விட்டால் தானாக மூளை வழிக்கு வந்துவிடும். கடந்த 6½ ஆண்டுகளாக நான் இனிப்பு சுவை தரும் எந்த உணவையும் பொருளையும் உண்டதில்லை.
எனவே இனிப்பு சுவையை வருடம் ஒருநாள் அல்லது இரண்டு நாள் பண்டிகை காலங்களில் மட்டும் நாவுக்கும் மூளைக்கும் காட்டி வருவதே நல்லது.

எதிலும் வரம்பு மீறாமல் இருப்பது பல தீயவற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும் அல்லவா நாட்டு சர்க்கரை போட்டால் ரத்த சர்க்கரை அளவு ஏறாது என்று நம்பும் பெரியோரே தாய்மாரே பாட்டிமாரே தாத்தாமாரே நீங்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

சுகர் ஃப்ரீ போடுகிறேன் என்று கூறும் அண்ணன்மாரே அக்காமாரே தாங்கள் தங்களுக்கே தெரியாமல் அந்த இனிப்புக்கான அடிமைத்தனத்தை வளர்த்து வருகிறீர்கள். இது உங்களை திரும்ப திரும்ப இனிப்பை எடுக்கச் சொல்லி உந்தும். உங்களால் இனிப்புக்குண்டான அடிமைத்தனத்தில் இருந்து வெளியே வரவே முடியாது.

நீரிழிவு நோயர்களே, தயவு செய்து இனிப்பு சுவை தரும் அத்தனை உணவுகளையும் இன்றிலிருந்து ஒரு மாதம் நிறுத்துங்கள் அதற்குப்பின்பு இனிப்பு கலக்காத பாலில் உள்ள தித்திப்பைக்கூட உங்கள் நாவின் சுவை அரும்புகள் உங்களுக்கு காட்டும். இனிப்பு சுவை என்பது மனிதனின் உடலுக்கு தீது உண்டாக்கவல்லது அதை மருந்தைப்போல எப்போதாவது பண்டிகைகளின் போது எடுக்கலாம்.

தேன் கூட மருந்து தான். அதை தினமும் எடுப்பது தவறு. நம் முன்னோர்கள் எந்த காலத்திலும் நம்மைப்போல தினமும் சீனி/சர்க்கரை கலந்த இனிப்புகளை கண்டதுமில்லை, உண்டதுமில்லை. இட்லி தோசை கூட ஆடம்பரமாக பண்டிகைகளுக்கு மட்டுமே வீட்டில் செய்யப்பட்ட காலங்கள் உண்டு. இன்று தினமும் இட்லி தோசை உண்ணாத வீடுகள் இல்லை.

பப்ஸ் சமோசா டொரினோ கலர் போன்றவை எப்போதாவது விருந்தாளிகள் வந்தால் வீட்டுக்குள் வரும். ஆனால் இன்று நமது குளிர்சாதனப்பெட்டிகளில் எங்கும் குளிர்பானங்கள் மாலை நேர ஸ்நேக்ஸாக இத்தனை பண்டங்கள். அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பது இனிப்பு சுவை.

நாம் இந்த இனிப்பு சுவைக்கு பிறந்த குழந்தை முதற்கொண்டு அடிமைப்படுத்துகிறோம். ஆறு மாதம் வரை நன்றாக பால் பருகி எடை கூடிய குழந்தை அதற்குப்பிறகு பிஸ்கட் , இனிப்பு கலந்து பால், இனிப்பு கலந்த உணவுகள் கொடுக்கப்பட்டு அதற்கு அடிமையாக்கப்படுகின்றன. பிறகு இனிப்பு இல்லாத உணவுகளை அவை உட்கொள்ள மறுக்கின்றன. இவற்றை நாம் கண்கூடாக நமது இல்லங்களில் காண முடியும்.

இனிப்பு என்பது மருந்து போன்றது. இனிப்பை நாம் மருந்து போல எப்போதாவது எடுத்தால் எதிர்காலத்தில் நீரிழிவுக்கு தினமும் மருந்து எடுக்கும் நிலையை தவிர்த்துக்கொள்ளலாம்.

பொறுமையுடன் படித்தமைக்கு நன்றி. கடைபிடிக்க முடிந்தால் இன்னும் சிறப்பு.

Dr.A.B. ஃபரூக் அப்துல்லா,
பொது நல மருத்துவர், சிவகங்கை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy