மயிலாடுதுறையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவில் நிவாரணம் -அமைச்சர் மெய்யநாதன்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவில் முதல்வர் நிவாரணம் தொகை அறிவிப்பார் அமைச்சர் மெய்யநாதன் பேசியுள்ளார். சீர்காழியில் பெய்த கனமழையால் வெள்ள நீர் வடியாமல் 5-ஆவது நாளாக பாதிக்கப்பட்டு, துண்டிக்கப்பட்டுள்ள இருவகொல்லை கிராமத்திற்கு…

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவில் முதல்வர் நிவாரணம் தொகை அறிவிப்பார் அமைச்சர் மெய்யநாதன் பேசியுள்ளார்.

சீர்காழியில் பெய்த கனமழையால் வெள்ள நீர் வடியாமல் 5-ஆவது நாளாக பாதிக்கப்பட்டு, துண்டிக்கப்பட்டுள்ள இருவகொல்லை கிராமத்திற்கு சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யனாதன், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் ஆகியோர் டிராக்டரில் சென்று பார்வையிட்டனர்.

முழங்கால் அளவு தண்ணீரில் அமைச்சர் இறங்கிச் சென்று மக்களுக்கு உணவுகளை வழங்கினார். மேலும் கிராமத்தில் பல்வேறு பகுதிகளில் மூழ்கியுள்ள வீடுகளை அமைச்சர் மெய்யனாதன் பார்வையிட்டு மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில், வடகிழக்கு பருவமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், செம்பனார்கோவில் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மழை நீர் வடியத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கொள்ளிடம் கிழக்கு பகுதி,சீர்காழி கிழக்கு பகுதி, கடற்கரை ஓரப் பகுதிகளில் தண்ணீர் இன்னும் வடியாமல் உள்ளது என்றார்.

மேலும், பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவுகள் மூன்று வேளையும் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் தண்ணீர் வடியாததால் பள்ளிகள் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. முகாம்களிலே மக்கள் தொடர்ந்து தங்கி உள்ளனர். தண்ணீர் வடியாத பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு தண்ணீரை வடிய வைப்பதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய் துறையுடன் இணைந்து பார்வையிட்டு தண்ணீரை வடிய வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

மக்களின் இயல்பு நிலையை முழுமையாக மீட்டெடுப்பதற்குத் தமிழக முதல்வரின் உத்தரவுப்படி மக்களுக்குத் தேவையான உதவிகள் வழங்குவதோடு அங்கு உள்ள பாதிப்புகள் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது எனவும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் மெய்யநாதன், வடகிழக்கு பருவமழை பாதிக்கப்பட்டு இரண்டே நாட்களில் தமிழக முதல்வர் சீர்காழி பகுதிக்கு நேரடியாக வருகை தந்து பார்வையிட்டு ஆய்வு செய்து சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள ஒரு லட்சத்து 6 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூபாய் 1000 வழங்கும் நிவாரண உதவியை அறிவித்துள்ளார் என கூறினார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 34 ஆயிரத்து 820 எக்டர் பரப்பளவு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக முதல்வர் நேரடியாகப் பார்வையிட்டு அதை கணக்கெடுத்து அதன் வின்னர் இழப்பீடு தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் கூறியுள்ளார். மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் குறிப்பாக பார்வையிட்டு அப்பகுதியில் வடிகால்களைத் தூர்வாரி தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.