தமிழக ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் -முத்தரசன்

தமிழக ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி டிசம்பர் 29ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார். சென்னை தி.நகரில் அமைந்துள்ள இந்திய…

தமிழக ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி டிசம்பர் 29ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் மாநில நிர்வாக குழு கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கடந்த இரு நாட்களாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்கள் குறித்து விளக்குவதற்காக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தனக்குரிய பொறுப்பிலிருந்து செயல்படாமல் பாஜக தலைவராகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும், பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஆளுநர் மாளிகையில் கிடப்பில் போடப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

அரசியலமைப்புச் சட்டத்தை மீறி செயல்படும் ஆளுநரை திரும்ப பெறக் கோரி, திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருக்கும் சூழலில், அதே காரணத்திற்காக டிசம்பர் 29 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார்.

தமிழகத்தில் தீவிரமடைந்திருக்கும் பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய பயிர்கள் ஏக்கர் ஒன்றிற்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக முத்தரசன் கூறினார்.

வியாசர்பாடி கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணத்திற்குக் காரணமான மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாஜக, அதிமுக தலைவர்கள் இந்த மரணத்தை அரசியலாக்க கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார். பொருளாதார இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்குள் எந்தவித முரண்பாடுகளும் இல்லை என தெரிவித்த முத்தரசன், அதை நினைத்து எதிர்க்கட்சிகள் கனவு காண வேண்டாம் எனவும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.