தொற்று அதிகரித்தால் மாஸ்க் கட்டாயமாக்கப்படும்! – சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

கொரனா தொற்று அதிகரித்தால் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த கவன…

கொரனா தொற்று அதிகரித்தால் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ”நேற்று 400 பேருக்கு கொரனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் வைரஸ் பாதிக்கப்படுவதாக செய்திகள் வெளிவருகின்றன. தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் முகாம் நடத்த வேண்டும்.

வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க வேண்டும். வீடு வீடாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். துண்டு பிரசுரங்கள் வழங்க வேண்டும். மருத்துவமனைகளில் கொரானாவுக்காக தனி வார்டு அமைக்க வேண்டும். மாஸ்க் அணிவது தொடர்பாக அமைச்சர் தெரிவிக்கும் கருத்துக்களும், சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கும் கருத்துக்களும் வேறு வேறாக இருக்கின்றன. மாஸ்க் அணிவிப்பது தொடர்பாக அரசின் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன் ஒட்டுமொத்த இந்தியாவிலும் 100க்கும் கீழாக, தமிழ்நாட்டில் 2 என்ற அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இருந்தது. நேற்றைக்கு 386 ஆக தமிழ்நாட்டில் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரானா பரவல் தொடங்கியதுமே, உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள முதலமைச்சர் அறிவுறுத்தினார். தமிழ்நாடு எடுத்து வரும் நடவடிக்கைகளை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும் வெகுவாக பாராட்டினார்.

ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் மருத்துவமனைகளில் மாஸ்க் கட்டாயம் என அறிவித்தோம். பொதுமக்கள் மாஸ்க் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் கட்டாயப்படுத்தவில்லை. மத்திய சுகாதாரத்துறை வழங்கிய அறிவுறுத்தலின்படி அனைத்து மருத்துவமனைகளில், மாதிரி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வரும்போது நாள் ஒன்றுக்கு 36,000 ஆக கொரோனா தொற்று இருந்தது.

ஆக்சிஜன் அவசியத்தை உணர்ந்து மத்திய அரசிடம் பேசி எடுத்த அதிரடி நடவடிக்கையாக ஆக்சிஜன் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது. 2,067 மெட்ரிக் டன் அளவு ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது. இந்த வசதியை முதலமைச்சர் ஏற்படுத்தித் தந்துள்ளார். தற்போது வந்திருக்கும் பாதிப்பு, உயிர் பறிக்கும் பாதிப்பாக இல்லை. மிதமான தொற்றாக உள்ளது. காய்ச்சல், தொண்டை வலி ஆகியவை மட்டுமே ஏற்படுகிறது. இதனால் ஆக்சிஜன் தேவை ஏற்படவில்லை. அவசர சிகிச்சை பிரிவு தேவைப்படவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக தொற்று அதிகரித்துக் கொண்டிருப்பதால், இதனை நான்காவது அலையாக கருத முடியாது. இருப்பினும் மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் என அறிவித்துள்ளோம். எண்ணிக்கை பெருகும் பட்சத்தில், பொது இடங்களில், மக்கள் கூடும் இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் என கொண்டு வரலாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கொரனா தொற்று அதிகரித்தால் பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்படும்.

முதலமைச்சர் எதையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என சொல்லியுள்ளார். கொரோனா என்பது 2019 இறுதியில் தொடங்கி பல்வேறு பெயர்களில் உருமாறிக் கொண்டிருக்கிறது. அது எப்படி வந்தாலும், தமிழ்நாட்டு மக்களை முதலமைச்சர் காப்பார். பெரியளவில் பாதிப்பு இல்லை என்றாலும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இணை நோய்கள் இருப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.