ஒரே சாதிக்குள் மட்டும் தான் உங்களுடைய ஒப்பீடு இருக்குமா? எழுத்தாளர்கள் வண்ணநிலவன், இமையம் இடையே கருத்து மோதல்!

தன்னை மிக மோசமான எழுத்தாளர் என விமர்சித்த, எழுத்தாளர் வண்ணநிலவனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, உங்களுடைய இலக்கிய தர ஒப்பீடு ஒரே சாதிக்குள் மட்டும் தான் இருக்குமா? என எழுத்தாளர் இமையம் கேள்வி எழுப்பியுள்ளார்.…

தன்னை மிக மோசமான எழுத்தாளர் என விமர்சித்த, எழுத்தாளர் வண்ணநிலவனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, உங்களுடைய இலக்கிய தர ஒப்பீடு ஒரே சாதிக்குள் மட்டும் தான் இருக்குமா? என எழுத்தாளர் இமையம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தான் பார்த்து, பழகிய, வாழ்ந்த கிராமத்தையும், ஒடுக்கப்பட்ட கிராமத்து மக்களையும் தனது கதைகளில் உயிர்ப்பாகச் சித்தரித்து வருபவர் தமிழ் நாவலாசியரும் எழுத்தாளருமான இமையம் . இவரது இயற்பெயர் அண்ணாமலை. கடலூர் மாவட்டத்தில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் விருத்தாசலத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். நாவல்கள், சிறுகதைகள் என இரு தடங்களிலும் தொடர்ந்து பயணித்து வரும் இவர் சாதி ஒடுக்கு முறைகளையும், கிராமத்துப் பெண்களுக்கு பாலியல் ரீதியாக நேரும் துயரங்களையும், ஆணாதிக்க அவலங்களையும், சமூகரீதியிலான வக்கிரங்களையும், தொடர்ந்து தனது படைப்புகளில் தோலுரித்துக் காட்டி வருகிறவர்.

இவரின் எழுத்துகள் மிகமிக எளிமையானவை. அடித்தட்டு மக்களின் வாழ்வை, அவர்களின் பிரச்னைகளை நேரடியான மொழியில் பேசுபவை. இமையத்தின் கோவேறு கழுதைகள், ஆறுமுகம், பெத்தவன், பணம் ஆகிய நாவல்கள் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றவை. அதனால்தான் இவர் கதா விருது, பாஷாபாரதி, ‘சாகித்ய அகடமி’ உள்ளிட்ட எண்ணற்ற விருதுகள் பலவற்றை பெற்றவர்.

அப்டிப்பட்ட இந்த எழுத்தாளரின் எழுத்துக்களை விமர்சித்து, எழுத்தாளர் வண்ண நிலவன் தனது முகநூல் பக்கத்தில் மார்ச் 23. 24 ஆகிய தேதிகளில் பதிவுகளை வெளியிட்டிருந்தார். அதில் இமையத்தை விட தலித் எழுத்தாளர்களான பூமணி, டி.செல்வராஜ், சிவகாமி, கருக்கு பாமா ஆகியோரெல்லாம் வறட்டுத்தனமில்லாத நடையில் எழுதும் சிறந்த எழுத்தாளர்கள். செல்வராஜின் மலரும் சருகும், தேநீர் ஆகிய நாவல்கள் போன்று இமையத்தால் நளினமான முறையில் எழுத முடியுமா? பூமணியின் வெக்கை, அஞ்ஞாடி மாதிரியெல்லாம் எழுத முடியாதவர், தகரடப்பாவில் கற்களை போட்டு குலுக்குவது போன்ற வறட்டு நடைக்குச் சொந்தக்காரர். பாமாவின் கருக்கு போல், சிவகாமியின் பழையன கழிதலும் போல் எழுத தெரியாதவர் இமையம். தினசரி பேப்பர் தமிழில் எழுதிகிறவர். இதை அவரது மனசாட்சியே சொல்லும் என கடுமையாக விமர்சித்திருந்தார்.

எழுத்தாளர் வண்ணநிலவனின் இந்த பதிவிற்கு, அதே முகநூல் பக்கத்தில் பதிலளித்துள்ள எழுத்தாளர் இமையம், என்னுடைய எழுத்துக்களின் தரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள வண்ணநிலவனின் பதிவை ஒரு வாசகரின் கருத்தாக ஏற்கலாம். நீங்கள் கூறியிருக்கும் கருத்து அது உங்களுடைய தனிப்பட்ட அபிப்ராயம். ஆனால் கடந்த 10.04.2023 அன்று நீங்கள் எழுதியிருந்ததை நான் ஏற்க முடியுமா? பிறப்பால் தலித்துகளான பூமணி, டி.செல்வராஜ், சிவகாமி, கருக்கு பாமா ஆகியோரின் எழுத்துகளுடன் மட்டுமே என்னுடைய எழுத்துகளை ஒப்பிட்டுள்ளீர்கள். தலித் எழுத்தாளர்களிலேயே மிக மோசமான எழுத்தாளன் என்று என்னை கூறியுள்ளீர்கள். எனக்கு அது பிரச்னை இல்லை.

கன்னட கவிஞர் குவெம்பு பெயரிலான தேசிய விருதுக்கு எழுத்தாளர் இமையம் தேர்வு -

தலித் எழுத்தாளர்களோடு மட்டுமே என்னை ஒப்பிட்டு எழுதியது ஏன்? பிற இனத்து எழுத்தாளர்களோடு ஒப்பிடாதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் உங்களுடைய இலக்கிய பார்வையில் என் அளவிற்கு தரம் கெட்ட எழுத்தாளர் பிற இனத்தில் ஒருவர் கூட இல்லை அப்படித்தானே என்றும், உங்களுடைய இலக்கிய தர ஒப்பீடு ஒரே சாதிக்குள் மட்டும் தான் இருக்குமா? எனவும் கேட்டுள்ளார். தற்பொழுது எழுத்தாளர் இமையத்தின் இந்த பதிவு பலராலும் படிக்கப்பட்டு வருவதோடு, எழுத்தாளர் வண்ணநிலவனுக்கு எதிராக கருத்துகளும் பதிவிடப்பட்டு வருகிறது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.