பொது இடங்கள் மற்றும் சாலைகளில் மாடுகள் திரிந்தால் அவை பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என சென்னை துணை மேயர் மகேஷ் குமார் தெரிவித்தார்.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை ரிப்பன் மாளிகையில் சென்னை மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார் தலைமையில் இரத்த தான
முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 100 க்கும் மேற்பட்டார் கலந்து கொண்டனர்.
இதில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இரத்த தானம் செய்பவர்களை பார்த்த பின்பு மேயர் பிரியா ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா ராஜன், ஒருவருக்கு இரத்தம் என்பது அடிப்படையான ஒன்று என்றார். மேலும் திருவல்லிக்கேணியில் சுந்தரம் என்ற முதியவர் மாடு முட்டி உயிரிழந்த சம்பவத்தை பற்றி பேசிய அவர், சுந்தரம் என்ற முதியவருக்கு ஏற்கனவே நிறைய உடல் உபாதைகள் இருந்தது, அவர் உயிரிழந்ததற்கு மாடு முட்டியதை மட்டுமே காரணமாக எடுத்து கொள்ள கூடாது, மாடு முட்டிய சம்பவத்தில் அவர் நிறைய பயந்து விட்டார், அதோடு வயது முதிர்ச்சியும் ஒரு காரணம். பொது இடங்களில் அலையும் மாடுகளுக்கு அபராத தொகை முன்பு இருந்ததை விட அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் மட்டும் இது வரை 78 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது என கூறினார்.
பொது இடங்களில் அலையும் மாடுகள் முதல் முறை பிடிபட்டால் 5000 ரூபாய் அபராதமும், இரண்டாம் முறை பிடிபட்டால் 10000 ரூபாய் அபாதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இனிமேல் மூன்றாவது முறை பிடிபட்டால் மாநகராட்சியே மாடுகளை வளர்த்து உணவு வழங்கும் மற்றும் பால் கறக்கும் நேரத்தில் மட்டும் உரிமையாளர் அனுமதிக்கப்படும் போன்ற ஒரு திட்டத்தை முதல்வர் மற்றும் நகராட்சி அமைச்சரிடம் ஆலோசனை பெற்று நடைமுறை படுத்தப்படும் என தெரிவித்தார்.
மாடுகள் வளர்ப்பது தவறில்லை அதனை சாலையில் விடுவது தான் பிரச்சினையே என்று தெரிவித்தார். மேலும் சென்னையில் கொசு மருந்து அடிக்கும் பணி மாநகராட்சி சார்பாக தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்கள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு தெரிவிக்க பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.
துணை மேயர் மகேஷ் குமார் பேசுகையில், மாடு முட்டி இறந்த சுந்தரம் முதியவருக்கு இரங்கல் தெரிவித்த அவர், சில மாதங்களாகவே இந்த தெருவில் அலையும் மாடுகளால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும், மாடுகளை தெருவில் விட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று கூறியும் பலர் அதை பொருட்படுத்துவதில்லை என்றார்.
மாநகராட்சியின் அறிவிப்பை மீறி மீண்டும் மாடுகளை தெருவில் நடமாட விட்டால் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு , உரிமையாளர் மேல் வழக்கு பதிவு செய்ய
பட வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்தார்.







