கழிவறை இல்லாததால் 2 குழந்தைகள் பலி; நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக துணை வட்டாட்சியர் சம்பவ இடத்தில் ஆய்வு!

கழிவறை இல்லாததால் 2 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் குறித்து  நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக போளூர் துணை வட்டாட்சியர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.   திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த பெரியகரம்…

கழிவறை இல்லாததால் 2 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் குறித்து  நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக போளூர் துணை வட்டாட்சியர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.  

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த பெரியகரம் அருகே உள்ள காந்திநகர் கிராமத்தில் காவியா என்பவர் இயற்கை உபாதை கழிக்க வயல்வெளிக்கு இன்று காலை சென்ற போது அவர் பின்னால் அவரது மகள் பவ்ய ஸ்ரீ மற்றும் காவியாவின் அண்ணன் குழந்தையான சிந்து பாரதியும் சென்ற போது இந்த இரண்டு பெண் குழந்தைகளும் விவசாய கிணற்றில் தவறி விழுந்து இறந்தனர்.

காவியாவின் குழந்தை பவ்யஸ்ரீ மற்றும் அவரது அண்ணன் குழந்தை சிந்து பாரதி ஆகிய இரு பெண் குழந்தைகளுக்கும் இந்த துயர முடிவு நேரிட்டது.  கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட இரு பெண் குழந்தைகளின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காகத் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதை தொடர்ந்து,  அப்பகுதியில் அனைத்து வீடுகளுக்கும் கழிவறைகள் உடனடியாக ஏற்படுத்தித் தரப்படும் எனவும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்கிறேன் எனவும் அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொலைப்பேசி வாயிலாக நியூஸ்7 தமிழுக்கு தகவல் அளித்துள்ளார்.

இந்நிலையில்,  கோரிக்கை விடுத்தும் கழிப்பறைகள் கட்டி தரப்படாததே 2 குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணம் என அப்பகுதி மக்கள் நியூஸ் 7 தமிழ் வாயிலாக குற்றச்சாட்டு வைத்தனர்.  இதையடுத்து 2 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் குறித்து  நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக போளூர் துணை வட்டாட்சியர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.