“எனது பத்மஸ்ரீ விருதை பிரதமரிடம் திரும்பி அளிக்க உள்ளேன்” – பஜ்ரங் புனியா அறிவிப்பு!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனது பத்மஸ்ரீ விருதை பிரதமரிடம் திரும்பி அளிக்க உள்ளதாக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அறிவித்துள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் நேற்று நடைபெற்றது.…

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனது பத்மஸ்ரீ விருதை பிரதமரிடம் திரும்பி அளிக்க உள்ளதாக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அறிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் மொத்தமிருந்த 47 வாக்குகளில் 40 வாக்குகளை பெற்ற சஞ்சய் சிங் மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த சஞ்சய் சிங், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் நண்பராவார்.

இதையடுத்து தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனையான சாக்‌ஷி மாலிக் கதறி அழுததுடன், மல்யுத்த விளையாட்டை விட்டே விலகுவதாக தெரிவித்தார். சாக்‌ஷி மாலிக்கின் இந்த முடிவு பெரும் அதிர்ச்சியை ஏறப்படுத்தியுள்ள சூழலில், தனது பத்மஸ்ரீ விருதை பிரதமர் நரேந்திர மோடியிடம் திரும்ப ஒப்படைக்க உள்ளதாக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அறிவித்துள்ளார்.

இது குறித்து பஜ்ரங் புனியா தனது X தளத்தில் கூறியிருப்பதாவது:

“எனது பத்மஸ்ரீ விருதை பிரதமர் நரேந்திர மோடியிடம் திரும்பி அளிக்க உள்ளேன். இது தொடர்பாக என்னுடைய கடிதத்தையும் இணைத்துள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து தனது பத்மஸ்ரீ விருதைத் திருப்பித்தர டெல்லியிலுள்ள பிரதமர் இல்லத்துக்கும் பஜ்ரங் புனியா சென்றார். அவரை காவல்துறையினர் வழிமறிக்கும் வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சிங் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லியில் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியது.

https://twitter.com/BajrangPunia/status/1738156175734997051

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.