உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தீப் புதோலியா. இவர் மருத்துவ பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 2019-ம் ஆண்டு சோனாலி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தையும் உள்ளார். முன்னதாக சந்தீப் புதோலியா தனது திருமணத்தின்போதே சோனாலியின் தந்தை சஞ்சீவ் திரிபாதியிடம் இருந்து ரூ.20 லட்சத்தை வரதட்சணையாக பெற்றதாக சொல்லப்படுகிறது.
ஆனால் அதன் பிறகு தனக்கு கார் வேண்டும் என்று சோனாலியின் தந்தையிடம் சந்தீப் கேட்டுள்ளார். இதனால் குடும்பத்திற்குள் பிரச்னை ஏற்பட்டதை அடுத்து போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர். இதற்கிடையில் சோனாலிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மேலும், இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது சந்தீப் புதோலியாவின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. தம்பதியினர் இடையே அடிக்கடி வரதட்சணை தொடர்பான பிரச்னை ஏற்பட்டு வந்தது. இதனால் கோபமடைந்த சோனாலி தனது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இருவரும் சுமார் 2 ஆண்டுகளாக சோனாலியும், சந்தீப்பும் பிரிந்து வாழ்ந்தனர். சமீபத்தில் சோனாலியை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு சந்தீப் அழைத்தார். இதையடுத்து குடும்பத்தினர் இணைந்து பேசி, இருவரையும் சேர்த்து வைத்தனர். இந்த நிலையில், நேற்று சந்தீப்பின் குடும்பத்தினர் சோனாலியின் தந்தையை தொலைபேசியில் அழைத்து, அவரது மகள் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறினர்.
உடனடியாக சந்தீப்பின் வீட்டிற்கு சென்ற சோனாலியின் பெற்றோர் தங்கள் மகள் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி வாக்குவாதம் செய்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சோனாலியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே சோனாலியின் 4 வயது குழந்தை தர்ஷிகா, தந்தை தனது தாயை அடித்துக்கொன்று தூக்கில் தொங்கவிட்டது போன்று ஓவியம் வரைந்தார். இதனையடுத்து அப்பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்தனர்.








