‘ஜெயிலர் 2’ படத்தின் வில்லன் இவரா?

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள ‘ஜெயிலர் 2’ படத்தின் வில்லன் கதாபாத்திரம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

கோலமாவு கோகிலா படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார் இயக்குநர் நெல்சன். தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர், விஜய் நடித்த பீஸ்ட் உள்ளிட்ட படங்களை இயக்கினார். கடந்த 2023ம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தினை இயக்கி இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்தார் நெல்சன்.

இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். ஜெயிலர் திரைப்படம் ரூ.600 கோடி வசூலைக் கடந்து மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார் நெல்சன். தற்போது ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜின் ‘கூலி’ படத்தில் நடித்து வருவதால் இதன் படப்பிடிப்பு நிறைவடந்த உடன் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பை தொடங்குவார் என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் ‘ஜெயிலர் 2’ படத்தின் அறிவிப்பு டீசர் வெளியாகி இணையத்தை கலக்கியது.

‘ஜெயிலர் 2’ படத்தில் மோகன் லால், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தில் நடிக்க உள்ள வில்லன் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, எஸ்.ஜே. சூர்யா அல்லது செம்பன் வினோத் ஜோஸ் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவர் வில்லனாக நடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.