நிலத்தை அபகரித்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்; மூதாட்டி தர்ணா

உதவி செய்வது போல் நடித்து 80வயது மூதாட்டியை ஏமாற்றி நிலத்தை தமது பெயருக்கு எழுதிக்கொண்ட ஊராட்சி மன்ற தலைவரின் கணவரிடமிருந்து நிலத்தை மீட்டுத் தர வேண்டி மூதாட்டியின் குடும்பம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி…

உதவி செய்வது போல் நடித்து 80வயது மூதாட்டியை ஏமாற்றி நிலத்தை தமது பெயருக்கு எழுதிக்கொண்ட ஊராட்சி மன்ற தலைவரின் கணவரிடமிருந்து நிலத்தை மீட்டுத் தர வேண்டி மூதாட்டியின் குடும்பம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ளது டி.தம்மாண்டரப்பள்ளி கிராமம். இங்கு திம்மக்கா என்கிற மூதாட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு அதே கிராமத்தின் சாலை ஓரத்தில் 3 ஏக்கர் பட்டா நிலம் உள்ளது.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த நிலம் வேறு ஒருவருடைய பெயரில் மாற்றம் செய்திருப்பதாக திம்மக்கா குடும்பத்தினருக்குத் தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் டி.தம்மாண்டரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த முரளி என்பவரிடம் முறையிட்டுள்ளனர். முரளி இந்த பிரச்னையில் தலையிட்டு திம்மக்காவின் நிலத்தை மீட்டுக்கொடுத்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த பஞ்சாயத்து தேர்தலில் முரளியின் மனைவி லட்சுமி குந்துமாரணப்பள்ளி கிராமத்தில் பஞ்சாயத்துத் தலைவராக வெற்றி பெற்றுள்ளார்.

இந்த நிலையில் அதிகாரிகளை கைக்குள் வைத்துக்கொண்டு திம்மக்காவின் குடும்ப சொத்தான 3 ஏக்கர் நிலத்தில் 1 ஏக்கர் நிலத்தை முரளி தனது பெயருக்கு மாற்றியது திம்மக்கா குடும்பத்தினருக்குத் தெரியவந்துள்ளது . இதனையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள நிலம் பத்திர பதிவு அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். இது சம்பந்தமாக இரு தரப்பினரிடையேயும் பத்திரங்களை எடுத்துவரச்சொல்லி இருக்கிறார்கள் அதிகாரிகள்.

ஆனால் அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு நிலத்தை அபரித்துவிடுவார் என்று அஞ்சிய திம்மக்கா குடும்பத்தினர் முரளியின் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். முரளி அவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கெலமங்கலம் போலீசார் திம்மக்கா குடும்பத்தினரிடம் உரிய முறையில் அதிகாரிகளிடம் முறையிடுமாறு அறிவுறுத்தியதால் கலைந்து சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.