ஒசூரில் ஓட்டல் காவலாளி கத்தியால் குத்திக்கொலை செய்து பணம் திருடி சென்ற வழக்கில் சிறுவன் உட்பட 3 பேர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (60). இவர், ஒசூர் ஆவலபள்ளியில் உள்ள மகள் செல்வி வீட்டில் தங்கி, மேலும், ஓசூர் கமர்சியல் சாலை பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். பணி முடித்துவிட்டு இரவு நேரத்தில் ஓட்டலில் தங்கி விடுவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த 25-ந்தேதி ஓட்டலின் மேற்கூரையை பிரித்து உள்ளே புகுந்த கொள்ளை கும்பல் கல்லாப்பெட்டியில் திருட முயன்றது. இதையறிந்த தாமோதரன் சத்தம் போட்டதால் மர்ம கும்பல், கத்தியால் காவலாளியை சரமாரியாக குத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
பின்னர், ஓட்டல் கல்லாப் பெட்டியில் இருந்த 17 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து ஓசூர் டவுன் போலீசாருக்கு வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே கொள்ளையர்களை பிடிக்க எஸ்.பி. சாய்சரண் தேஜஸ்வி 6 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.
அதன்பேரில் தனிப்படை போலீசார் ஓசூர் சுற்றுவட்டாரத்திலும் மற்றும் பெங்களூரு பகுதியிலும் கொள்ளை கும்பலை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் ஒரு சிறுவன் உட்பட சேக்அபித் (25),தோஷீப்(19) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.









