19 வது ஐபில் தொடர் நாளை தொடங்க உள்ளது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூருவை ஐதராபாத் அணி எதிர்கொள்கிறது.
2026 ஐபில் தொடரின் எம்.எஸ். தோனி, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்களின் செயல்பாடு எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த சூழலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, ”விராட் கோலியின் மிகச்சிறந்த உடற்தகுதி மற்றும் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கும் அனுகூலம் ஆகியவற்றால் இந்த ஐபிஎலில் அவர் மீண்டும் ஜொலிப்பார். ரோகித் ஷர்மாவுக்கும் இது பொருந்தும், ஆனால் அவர்கள் இருவரில், விராட் கோலிக்கு அவரது இது சற்று எளிதாக இருப்பதாக நான் உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ரோகித் சர்மா குறித்த பேசிய அவர், ”ரோகித் ஒரு குறிப்பிட்ட விதத்தில் பேட் செய்ய விரும்புகிறார். ஆனால், மறுமுனையில் குயின்டன் டி காக், திலக், சூர்யா, ஹர்திக், வில் ஜாக்ஸ், ரூதர்ஃபோர்ட், என ஒரு அணி வரிசை இருக்கிறது. இதனால் ரோகித் சர்மா முதல் ஆறு ஓவர்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
இறுதியாக எம்.எஸ். தோனி குறித்து பேசிய அவர், “தோனிக்கு இந்த தொடர் சற்று கடினமாகத்தான் இருக்கும். ஏனென்றால் அவர் 40 வயதைக் கடந்துவிட்டார். 10 மாதங்களாக எந்த வித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாமல் உள்ள தோனி ஐபிஎல் தொடரில் மட்டும் களமிறங்கி முழு உத்வேகத்துடன் விளையாடுவதும், அதுவும் 10-12 பந்துகள் மட்டுமே எதிர்கொள்ளும் ஒரு வரிசையில் விளையாடுவதும் மிகவும் கடினமான காரியம். அதோடு அவர், 20 ஓவர்கள் விக்கெட் கீப்பிங் செய்ய வேண்டியிருக்கிறது” என்றார்.







