ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது மூன்று மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்…

பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது மூன்று மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், மதுரவாயலில் நடைபெற்ற இந்து முன்னணி மாநாட்டில், இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் பேசிய போது, ஸ்ரீரங்கம் கோயில் வாசலில் உள்ள பெரியார் சிலையை உடைத்து அகற்றுகின்ற நாள் தான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும் என பேசியதாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும், இரு தரப்பினரிடையே மோதலை உண்டாக்கும் வகையில் கனல் கண்ணன் பேசியுள்ளதால், அவர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கேட்டுக்கொண்டிருந்தார். இந்தப் புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கனல் கண்ணனை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் புகார்தாரரான குமரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கில் கனல் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்து ஜந்து மாதங்கள் ஆகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்றும், உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விசாரணையை துரிதப்படுத்த உத்தரவிடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் சந்தோஷ், மூன்று மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதைப்பதிவு செய்த நீதிபதி, மூன்று மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.