ஆஸ்கர் குழுவினர் வெளியிட்டுள்ள பரிந்துரை பட்டியலில் இயக்குநர் பார்த்திபனின் `இரவின் நிழல்’ திரைப்படம் இடம்பெற்றுள்ளது. காந்தாரா, ராக்கெட்ரி ஆகிய திரைப்படங்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
சினிமாவின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. வருகிற மார்ச் மாதம் 95-வது ஆஸ்கர் விருது விழா நடைபெற இருக்கிறது. இதற்காக போட்டியிடும் படங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 301 படங்களின் பரிந்துரை பட்டியலை ஆஸ்கர் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்தப் பட்டியலில் 10 இந்திய திரைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இரா.பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த இரவின் நிழல் திரைப்படமும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்த தகவலை இயக்குநர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் மட்டுமே‘இரவின் நிழல்’ இருக்கிறது. ஆனால், ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்குரிய போட்டி பட்டியலில் இருக்கிறது. வெற்றி வாய்ப்பும் வெளிச்சமாகவே இருப்பது நமக்கெல்லாம் பெருமையே!
ஆனால் அதற்காக (அப்படத்திற்கு மட்டுமல்ல எல்லா ஹாலிவுட் படங்களுக்கும் கூட) மிகப் பெரிய செலவில் அங்கிருக்கும் ஏஜென்ஸி மூலம் விளம்பரம் செய்யப்படுவது உலகறிந்த உண்மை. ஆர்ஆர்ஆர் படம் இந்திய அளவிலான படம் என்ற வட்டத்தை எல்லாம் தாண்டி உலக அரங்கின் கவனம் ஈர்த்திருப்பது நாம் கௌரவத்துடன் கொண்டாடப் படவேண்டியது. அப்படிப்பட்ட மதிப்பு வாய்ந்த படத்திற்கே பல கோடிகளில் விளம்பரம் செய்ய வேண்டியுள்ளது.
பெரும் பட்ஜெட் மாபெரும் கலக்ஷன் வந்த படத்திற்கு அந்த செலவு சிறிது. ஆனால் அந்த அங்கீகாரம் அவசியம். அவ்வசியத்திற்கு தேவையான மை (டாலரில் ரூபாய்) கைவசம் இல்லாத்தால் ஒருமுறை இரவின் நிழல் சிறப்பு திரையிடல் செய்ய 5 லட்சம் கேட்டும் அப்படி எந்த சிறப்பு திரையிடலும் இந்த முறை வேண்டாம் எனக் கூறிவிட்டேன்.
அப்படியிருந்தும் “அப்படியா? லிஸ்ட்டில் நம் பெயர் உள்ளதா?” என்ற ஆச்சர்யமே ஆனந்தமே! விருதின் மதிப்பறிந்தவன் நான் என்பதால், ஆர்ஆர்ஆர்-ன் உச்சபட்ச மதிப்பறிந்தவன்.குறைவாக மதிப்பிட்டால் அது என்னையே குறைத்து மதிப்பிடுதலுக்கு சமம். “உலகத்தில பணத்தை விட பெரிய விஷயம் நிறைய இருக்கு, அது எல்லாத்தையும் பணத்தாலதான் வாங்க முடியும்”-இரவின் நிழல் விசன வசனம். கேம்பைன் என்பது பணம் செலவழித்து அப்படைப்பை சம்மந்தப்பட்டவர்களின் கண்களுக்குள் பொறுத்துவது. தகுதியுடன் உயரம் தொட்டிருக்கும் ஆர்ஆர்ஆர் உச்சம் தொடுவது நமக்கெல்லாம் பெருமையே!. இவ்வாறு பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.







