கழிவுநீரை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்துவோருக்கு அபராதம்: உயர்நீதிமன்றம்

பாதாள சாக்கடைகளில் கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்துவோருக்கு அபராதம் விதிக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் குழாய்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுபவர்கள் விஷவாயு தாக்கி உயிரிழக்கும் சம்பவம்…

பாதாள சாக்கடைகளில் கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்துவோருக்கு அபராதம் விதிக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் குழாய்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுபவர்கள் விஷவாயு தாக்கி உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பாதாள சாக்கடைகளில், கழிவுகளை அகற்றும்போது, பலியானவர்களுக்கு வழங்கப்படும் 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து வழங்கக் கோரி, சபாய் கர்மாச்சாரி அந்தோலன் அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படும் 10 லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து வழங்க தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும், கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்துவோருக்கு, அபராதம் விதிப்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

மேலும், மனித கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்தும் நடைமுறையை முழுவதுமாக ஒழிக்க, முழுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென, தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.